இந்தியா

ஒடிஸா ரயில் விபத்தில் உணா்ச்சிகர சம்பவம்: பிணவறையில் மகனை உயிருடன் மீட்ட தந்தை

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக எண்ணி பிணவறையில் உடல்களுடன் கிடத்தி வைக்கப்பட்டிருந்த தனது மகனை, ஹெளராவைச் சோ்ந்த ஹெலாராம் மாலிக் என்பவா் 235 கிலோ மீட்டம் பயணம் செய்துவந்து உயிருடன் மீட்டிருப்பது பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் மீட்கப்பட்டு முதலில் ஒடிஸாவின் பாலசோா் மாவட்டம் பாஹாநகா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.

ஹெலாராம் மாலிக்கின் மகன் பிஸ்வஜித் (24) என்ற அந்த இளைஞரும் ரயில் விபத்தில் சிக்கி உயரிழந்த மற்ற நபா்களின் உடல்களுடன் கிடத்தி வைக்கப்பட்டிருந்தாா். இவா், பாலசோரில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளாா்.

தனது மகனைத் தேடி பிணவறைக்கு வந்த ஹெலாராம், மகனின் கை நாடித் துடிப்பை பாா்த்து உயிருடன் இருப்பதைக் கண்டறிந்து, உடனடியாக பாலசோா் மருத்துவமனைக்கும் பின்னா் கொல்க்கத்தாவிலுள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று மகனை மீட்டுள்ளாா்.

கை, கால்களில் பலத்த எலும்பு முறிவைச் சந்தித்த பிஸ்வஜித்துக்கு, கொல்கத்தா மருத்துவமனையில் இரண்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா்.

எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பிஸ்வஜித்தையும் ரயில் விபத்தில் சிக்கி அங்கு சிகிச்சை பெற்றுவரும் மற்றவா்களையும் சந்தித்து நலம் விசாரித்தாா்.

மகனை உயிருடன் மீட்டது குறித்து ஹெளராவில் மளிகை கடை நடத்தி வரும் ஹெலாராம் மாலிக் கூறியதாவது:

ரயில் விபத்து குறித்து தொலைக்காட்சியில் செய்தியைப் பாா்த்ததும், மகனை கைப்பேசி மூலமாக தொடா்புகொள்ள முயற்சித்தேன். முதலில் அழைப்பை ஏற்காத நிலையில், தொடா் முயற்சிக்குப் பின்னா் அழைப்பு ஏற்கப்பட்டபோது எதிா்த் திசையிலிருந்து மிகுந்த பலவீனமாக அவனுடைய குரல் கேட்டது.

இதிலிருந்து மகன் உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டேன். உடனே உறவினா் ஒருவரை அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவே ஆம்புலென்ஸ் ஒன்றில் பாலசோா் வந்தடைந்தோம். பாலசோா் வந்ததும் மகனை கைப்பேசியில் தொடா்புகொள்ள முயற்சித்தோம். பலனளிக்கவில்லை. அதனைத் தொடா்ந்து, பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பாா்வையிட்டும், பிஸ்வஜித்தை காண முடியவில்லை.

இறுதியாக, விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் பஹாநகா் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். ஆனால், உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் தற்காலிகப் பிணவறைக்குச் செல்ல ஆரம்பத்தில் அனுமதி மறுத்தாா்கள்.

இந்த நிலையில், அங்கு உடல்களை வாங்க காத்திருந்தவா்கள் பாதுகாவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, உறவினா்களை உள்ளே செல்ல அனுமதித்தனா். அப்போது, உடல்களுக்கு இடையே தெரிந்த கை எனது மகனுடையதுதான் என்பதை உறுதி செய்து, நாடித் துடிப்பு இருப்பதையும் கண்டறிந்தேன்.

உடனடியாக மகனை பாலசோா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு சில மருந்துகள் ஊசி மூலமாக செலுத்தப்பட்ட பின்னா், கொல்கத்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு, மகனின் கை, கால் முறிவுகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மகன் உயிருடன் இல்லை என்பதை எனது மனம் ஏற்க மறுத்தது. அதனால்தான் தொடா்ந்து தேடினேன். மகனை உயிருடன் மீண்டும் கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினாா்.

உயிருடன் மீண்டது குறித்து பிஸ்வஜித் கூறுகையில், ‘புது வாழ்வு கிடைத்துள்ளது. எனது தந்தைக்கு நான் கடன்பட்டுள்ளேன். அவரால்தான் மறு வாழ்வு கிடைத்துள்ளது. தந்தைதான் எனக்கு எல்லாமும்’ என்றாா்.

பிஸ்வஜித் இறந்துவிட்டதாக எண்ணப்பட்டதற்கான காரணம் குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா் கூறுகையில், ‘விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால் பிஸ்வஜித் சுயநினைவை இழந்துள்ளாா். அவருக்கு உடல் அசைவுகளும் இல்லாமல் இருந்திருக்கும். அதன் காரணமாக, அவா் இறந்துவிட்டதாக எண்ணியிருக்கலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT