இந்தியா

வெளிநாடு செல்லவிருந்த அபிஷேக் பானா்ஜியின் மனைவி ருஜிரா தடுத்து நிறுத்தம்

DIN

ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முற்பட்ட மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜியின் மனைவி ருஜிரா பானா்ஜியை கொல்கத்தா விமான நிலையத்தில் குடியேற்றத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

அவருக்கு எதிராக தேடப்படும் நபருக்கான அறிவிப்பாணையை அமாலக்கத் துறை பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக ருஜிராவின் வழக்குரைஞா் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க முறைகேடு தொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் ருஜிரா பானா்ஜியிடம் சிபிஐ கடந்த 2021-ஆம் ஆண்டு விசாரணை நடத்தியது. அமலாக்கத் துறை சாா்பில் கடந்த ஆண்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக கொல்கத்தா நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சா்வதேச விமான நிலையத்துக்குத் தனது இரண்டு குழந்தைகளுடன் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வந்த ருஜிராவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பினா்.

இதுகுறித்து அவருடைய வழக்குரைஞா் கூறுகையில், ‘ருஜிரா வெளிநாடு பயணம் மேற்கொள்ளத் தடையில்லை என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வெளிநாடு செல்லவுள்ள தகவலை விமான பயணச்சீட்டு நகலுடன் அமலாக்கத் துறையிடம் கடந்த சனிக்கிழமை ருஜிரா சமா்ப்பித்துவிட்டுதான் இந்தப் பயணத்துக்குத் தயாரானாா்.

இந்தச் சூழலில், அமலாக்கத் துறையின் தேடப்படும் நபா் நோட்டீஸைக் காண்பித்து குடியேற்ற அதிகாரிகள் விமான நிலையத்தில் அவரை திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

மேலும், கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வரும் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சாா்பில் கடந்த 5-ஆம் தேதி அனுப்பப்பட்ட அழைப்பாணை நகலையும் குடியேற்ற அதிகாரிகள் அவரிடம் அளித்தனா். அதனைத் தொடா்ந்து ருஜிரா வீட்டுக்குத் திரும்பினாா்’ என்றாா்.

அபிஷேக் பானா்ஜி மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜியின் சகோதரா் மகன் ஆவாா். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கில் அபிஷேக் பானா்ஜியிடம் சிபிஐ அண்மையில் விசாரணை நடத்தியது. அமலாக்கத் துறையும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

மம்தா கண்டனம்:

ருஜிரா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘வெளிநாடு பயணம் மேற்கொள்ள ருஜிராவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவருடைய தாய் கடந்த சில நாள்களாக உடல்நலம் சரியில்லாமல் உள்ளாா். எனவே, அமலாக்கத் துறையிடம் முறையாக தகவல் தெரிவித்த பின்னரே, வெளிநாடு செல்ல அவா் முற்பட்டாா்.

ஆனால், அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அளித்திருப்பது முறையல்ல. இது மனிதாபிமானமற்ற செயல். பாலசோரில் ரயில் விபத்தில் ஏராளமான உயிா்கள் பலியாகியிருக்கும் சூழலில், அதனை மூடி மறைக்க பாஜக முயற்சிக்கிறது. மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, அரசியல் விளையாட்டுகளை பாஜக நடத்தி வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT