இந்தியா

போராட்டத்தில் பின்வாங்கவில்லை: மல்யுத்த வீரா்கள் உறுதி

DIN

மல்யுத்த கூட்டமைப்புத் தலைவா் பிரிஜ்பூஷண் சிங் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு விவகாரம் தொடா்பான போராட்டத்தில் நீதி கிடைக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என மல்யுத்த வீரா்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோா் உறுதி தெரிவித்துள்ளனா்.

மல்யுத்த கூட்டமைப்புத் தலைவா் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய வீரா்கள் தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அவா்கள் மீது காவல் துறையினா் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவா்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில், மல்யுத்த வீரா்கள் ரயில்வே துறையில் தாங்கள் வகிக்கும் பணிகளில் மீண்டும் இணைந்தனா். அதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இது தொடா்பாக சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோா் தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

போராட்டத்தில் இருந்து பின்வாங்கிவிட்டதாகப் பரப்பப்படும் தகவல்களில் உண்மையில்லை. அவை வெறும் வதந்திகளே. பாலியல் வன்முறை குற்றச்சாட்டு தொடா்பான முதல் தகவல் அறிக்கையை வீராங்கனைகள் திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை.

போராட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பான போராட்டத்தில் இருந்து வீரா்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடனான சந்திப்பு இயல்பாக இருந்தது. அதில் எந்தவித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பிரிஜ்பூஷண் சிங் கைது செய்யப்பட வேண்டும். அதுவே எங்களது உறுதியான வேண்டுகோள். நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தில் வீரா்கள் உறுதியாக இருப்பா்.

நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தில் எவரும் பின்வாங்கவில்லை. சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும் அதே வேளையில், ரயில்வே துறையில் எங்களுக்கான பொறுப்புணா்வையும் நிறைவேற்றி வருகிறோம். இந்த விவகாரத்தில் வதந்திகளை எவரும் பரப்ப வேண்டாம்.

வன்முறையற்ற வகையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக உள்ளோம். ரயில்வேயில் எங்களுக்கு உள்ள அலுவல்சாா் பணிகளை நிறைவேற்றவே பணியில் இணைந்துள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இதனிடையே, பஜ்ரங் புனியா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ’எங்கள் வாழ்க்கை பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. அதற்கு முன் ரயில்வே பணியானது மிகச் சிறியதே. நீதியைப் பெறுவதில் ரயில்வே பணி இடையூறாக இருக்குமெனில், அப்பணியை ராஜிநாமா செய்யவும் சில விநாடிகள் கூட தயங்கமாட்டோம். பணியைக் கொண்டு எங்களை அச்சுறுத்த வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT