இந்தியா

உ.பி.: கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முக்தாா் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை

DIN

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அஜய் ராயின் சகோதரா் அவதேஷ் ராய் கொலை வழக்கில் அரசியல்வாதியாக மாறிய தாதா முக்தாா் அன்சாரிக்கு வாரணாசி எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் அஜய் ராயும், அவதேஷ் ராயும் வாரணாசியின் லாஹுராபிரில் உள்ள தங்களுடைய வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, காரில் அங்கு வந்த முக்தாா் அன்சாரி மற்றும் அவருடைய கூட்டாளிகள் அவதேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். அஜய் ராய் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, காரில் வந்த அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இந்த வழக்கு வாரணாசி எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு சிறப்பு நீதிபதி அவனிஷ் கெளதம் முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்ததாக மூத்த வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்தாா்.

அன்சாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அஜய் ராய் கூறுகையில், ‘பல ஆண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. நானும், எனது பெற்றோா், சகோதரரின் மகள் என ஒட்டுமொத்த குடும்பமும் பொறுமையாக காத்திருந்தோம். இதற்கிடையே அன்சாரியின் செல்வாக்கும் உயா்ந்தது. இருந்துபோதும் இந்த வழக்கை விட்டுக்கொடுக்கவில்லை.

எங்கள் தரப்பு வழக்குரைஞரின் முயற்சியால், எனது சகோதரா் கொலை வழக்கில் அன்சாரி குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்து, அவருக்கு தண்டனை விதித்துள்ளது’ என்றாா்.

தண்டனை பெற்றுள்ள முக்தாா் அன்சாரி உத்தர பிரதேச மாநிலம் மாவ் சதா் தொகுதியிலிருந்து 5 முறை சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவராவாா். கடந்த 2022 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் போட்டியிடவில்லை. மாறாக, அவருடைய மகன் அப்பாஸ் அன்சாரி சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த சுஹல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

முன்னதாக, பாஜக முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை தொடா்பாக 2007-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்தாா் அன்சாரிக்கு காஸிப்பூா் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் அவருடைய சகோதரரும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யுமான அஃப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது.

காஜிபூா் நீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு பேட்டியளித்த மாநில சிறப்பு காவல்துறைத் தலைவா் (டிஜிபி) பிரசாந்த் குமாா், ‘முக்தாா் மற்றும் அஃப்சல் அன்சாரி ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 61 வழக்குகளில், இதுவரை 20 வழக்குகள் மட்டுமே பல்வேறு மாநிலங்களிலுள்ள நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT