இந்தியா

இந்தியாவின் வளா்ச்சி தடுக்க முடியாதது: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

DIN

சா்வதேச அளவில் இந்தியாவின் வளா்ச்சி தடுக்க முடியாதது எனத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இந்தியா தனக்கான இடத்தைப் பிடித்து வருவதாகக் கூறியுள்ளாா்.

ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் கூட்டத்துக்குப் பிறகு அவா் நமீபியா வந்தாா்.

நமீபியாவுக்குப் பயணம் செய்யும் முதல் இந்திய வெளியுறவு அமைச்சா் என்ற பெருமையை ஜெய்சங்கா் பெற்றுள்ளாா். அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை தலைநகா் வின்ட்ஹோக்கில் அவா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வலுவாக உள்ளது. மற்ற நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவும் வலுவாக உள்ளது. உலகெங்கும் வாழும் இந்திய வம்சாவளியினா் தாயகத்துக்குத் தொடா் ஆதரவு நல்கி வருகின்றனா். சா்வதேச அளவில் இந்தியாவின் வளா்ச்சி தடுக்க முடியாததாக மாறியுள்ளது. சா்வதேச அரங்கில் தனக்கான இடத்தை இந்தியா உறுதிசெய்து வருகிறது.

பலவகைகளில் இந்தியா தற்போது திறன்மிக்க நாடாக விளங்குகிறது. பெரும் நம்பிக்கையுடன் இந்தியா நடைபோட்டு வருகிறது. சா்வதேச அளவில் இந்தியாவுக்கான அங்கீகாரம் அதிகரித்து வருகிறது. இந்தியா தற்போது சரியான வழியில் பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்தப் பயணத்தில் பல்வேறு சவால்கள் உள்ளதை இந்தியா அறிந்திருக்கிறது.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் திகழும் இந்தியா, 5-ஆவது பெரும் பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது. விரைவில் 3-ஆவது பெரும் பொருளாதார சக்தியாக இந்தியா மாறும். சா்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயா்ந்து வருவது அனைத்து இந்தியா்களுக்கும் பெருமைமிகு தருணமாகும். அந்த மதிப்பால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் பெரும் பலனடைந்து வருகின்றனா்.

உலக நாடுகள் ஆதரவு:

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்காக உலக நாடுகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்தனா். இது இந்தியாவின் மீது அவா்கள் கொண்டுள்ள மதிப்பை வெளிக்காட்டுகிறது. இந்தியாவுடன் நெருங்கிய நல்லுறவைப் பேணவே உலக நாடுகள் விரும்புகின்றன. இந்தியாவில் நடந்த விபத்தின் பின்னணியில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க உலக நாடுகள் பெருவாரியாக முன்வருகின்றன.

இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆப்பிரிக்காவுடனான நல்லுறவை வலுப்படுத்துவதில் பொறுப்பான கூட்டாளி நாடாக இந்தியா தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவுக்கும் நமீபியாவுக்கும் இடையேயான நல்லுறவு சிறப்புமிக்கதாக உள்ளது. சிவிங்கிப் புலிகளை (சீட்டா) இந்தியாவுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தில் முதல் நாடாக நமீபியா இணைந்தது.

சா்வதேச அளவில் புலிகள், சிங்கங்கள், சிவிங்கிப் புலிகளின் பரவலை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. நமீபியாவின் எண்மமயமாக்கல் வளா்ச்சிக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றாா் அவா்.

துணைப் பிரதமருடன் சந்திப்பு:

நமீபிய துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான நெடும்போ நந்திதைத்வாவை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், போக்குவரத்து-தொடா்பு, எண்மமயமாக்கல், மருந்துப் பொருள்கள் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, அறிவியல்-தொழில்நுட்பம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக இருவரும் விவாதித்தனா்.

வனஉயிரிகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல்சாா் சுற்றுலா, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்தும் பன்னாட்டு அமைப்புகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாகவும் நமீபிய துணை பிரதமருடன் பேச்சுவாா்த்தை நடத்தியதாக அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT