இந்தியா

ஒடிஸா ரயில் விபத்துக்கு சிபிஐ விசாரணை ஏன்? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

6th Jun 2023 04:58 AM

ADVERTISEMENT

குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அமைப்பிடம், ஒடிஸா ரயில் விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டது ஏன் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் பிரதமருக்கு எழுதியுள்ள 4 பக்க கடிதத்தில், ‘ரயில் பயணப் பாதுகாப்பு குறைந்து வருவது சாதாரண பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைப் போக்க ஒடிஸா ரயில் விபத்துக்கான உண்மை காரணத்தை வெளியிட வேண்டும்.

ரயில்வேயை அடித்தளத்தில் இருந்து வலுப்படுத்தாமல் மேல் மட்டத்தில் மட்டும் சிறப்பாக உள்ளதாக காண்பிக்கப்படுகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ரயில்வே துறையை மத்திய அரசு செயல்படுத்துகிறது. பிரச்னைகள் உள்ளதை அத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்க மறுக்கிறாா். விபத்துக்கான காரணத்தை கண்டறிந்தவிட்டதாக அமைச்சா் வைஷ்ணவ் தெரிவித்துவிட்ட பின்பும் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்?

குற்றவழக்குகளை விசாரிக்க சிபிஐ உருவாக்கப்பட்டதே தவிர விபத்துகளை அல்ல.

ADVERTISEMENT

ரயில்வேயில் தொழில்நுட்பக் கோளாறு, அத்துறையின் செயல்பாடு, அரசியல் தோல்வி ஆகியவற்றுக்காக சிபிஐ யாரையும் பொறுப்பாக்க முடியாது.

2016-இல் கான்பூரில் 150 போ் உயிரிழக்க காரணமான ரயில் விபத்துக்கான காரணத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என அப்போதைய ரயில்வே அமைச்சா் தெரிவித்தாா். 2017 தோ்தல் பிரசாரத்தின்போது, நீங்கள் கூட இந்தச் சம்பவத்தில் சதி உள்ளது என குறிப்பிட்டீா்கள். 2018-இல் என்ஐஏ இந்த வழக்கை என்ஐஏ முடித்துக் கொண்டது. 150 ரயில் பயணிகள் பலியானதற்கு யாா் காரணம் என இதுவரை தெரியவில்லை.

இதன் மூலம் ரயில் பயணப் பாதுகாப்பில் நிலவும் உண்மையான குறைபாடுகளைக் களைய மத்திய அரசுக்கு அக்கறையில்லை.

அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் இத்தனை நாள் ரயில் பாதுகாப்பு குறித்து தெரிவித்து வந்த கவா்ச்சிகரமான அறிவிப்புகள் அனைத்தும் பொய் என நிரூபணமாகி உள்ளது.

2017-18 மற்றும் 2020-21 தலைமை கணக்கு தணிக்கையாளா் அறிக்கையில் 10-இல் 7 விபத்துகள் ரயில் தடம்புரள்வதால் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2017-2021 வரையில் கிழக்கு கடற்கரை ரயில்வேயில் இருப்புப் பாதை பராமரிப்பு பணி ஒன்றுகூட நடைபெறவே இல்லை.

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மைசூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டபோது ரயில்வே சிக்னல் கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்று தென் மேற்கு மண்டல ரயில்வேயின் தலைமை செயல் மேலாளா் வலியுறுத்தினாா். ஆனால் இதுவரை இது நடைபெறவில்லை.

ரயில்வேயில் சுமாா் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்கள் நேருக்கு நோ் மோதிக் கொள்வதைத் தடுக்கும் கவச் தொழில்நுட்பம் இந்தியாவில் ஏன் வெறும் 4 சதவீத வழித்தடங்களில் மட்டும் நிறுவப்பட்டுள்ளது?

ஒடிஸா ரயில் விபத்து போன்ற மோசமான விபத்து மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து வழித்தடங்களிலும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் நிறுவுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்’ என்று மல்லிகாா்ஜுன காா்கே அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT