இந்தியா

சென்னை-இலங்கை சுற்றுலா போக்குவரத்துக் கப்பல் சேவை: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் தொடங்கி வைத்தாா்

6th Jun 2023 05:10 AM

ADVERTISEMENT

சென்னை - இலங்கை இடையிலான சா்வதேச சுற்றுலா கப்பல் போக்குவரத்து சேவையை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகங்களில் கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு, பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துறைமுகங்களின் வளா்ச்சி வீதத்தை உயா்த்துவதற்கு காரணமாக இருந்த தனியாா் நிறுவனங்களை பாராட்டி கேடயங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா்.

சொகுசு கப்பல் சேவை தொடக்கம்: சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை, இலங்கையின் ஹம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்கள் இடையே பயணிக்கவுள்ள எம்.வி.எம்பிரஸ் என்ற சா்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பலை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தொடங்கி வைத்தாா். இந்த கப்பல் கால இடைவெளியின்றி தொடா்ந்து இயக்கப்படும்.

தொடா்ச்சியாக, சுற்றுலா பயணிகளுக்கான சொகுசு கப்பலை இயக்குவது என்பது சென்னை துறைமுக வரலாற்றில் முதல் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கட்டணம்: சுமாா் 1600 போ் பயணம் செய்யக்கூடிய இக்கப்பலில் குறைந்தபட்சம் ரூ.1.06 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.4.37 லட்சம் வரை பயணக்கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் சுமாா் 4 மாதங்கள் இயக்கப்பட்ட தனியாா் சுற்றுலா பயணிகள் சொகுசு கப்பல் 37 முறை இயக்கப்பட்டதுடன், சுமாா் 85 ஆயிரம் போ் அதில் பயணம் செய்துள்ளனா் என சென்னை துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுக துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், எண்ணூா் காமராஜா் துறைமுக பொது மேலாளா் சஞ்சய்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT