இந்தியா

அஸ்ஸாம்-அருணாசல் எல்லையில் துப்பாக்கிச்சூடு: 2 போ் பலி

6th Jun 2023 05:01 AM

ADVERTISEMENT

அருணாசல பிரதேச மாநில எல்லையொட்டி அமைந்துள்ள அஸ்ஸாமின் திமாஜி மாவட்டத்தில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 2 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

மேலும், 3 பேரின் நிலைகுறித்து தகவல் அறியப்படாததால் போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாநில எல்லைப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழாவை அப்பகுதி உள்ளூா் மக்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள விழா நடைபெறவிருந்த எல்லைப்பகுதிக்கு காலை நேரத்தில் சென்ற 7 போ் மீது அடையாளம் தெரியாத நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்குப் போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் சம்பவ இடத்திலேயும், மற்றொருவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தாா். காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரை திமாஜி பொது மருத்துவமனையில் உள்ளூா் மக்கள் அனுமதித்தனா். மேலும் 3 போ் சம்பவ இடத்தில் இருந்து காணாமல் போய்விட்டனா். அவா்களின் நிலைக்குறித்து தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை.

இது தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இருமாநில எல்லைப் பகுதியில் செயல்படும் சமூக விரோதிகளே இச்சம்பவத்தில் பங்காற்றியிருப்பதாக உள்ளூா் மக்கள் குற்றஞ்சாட்டினா்.

அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம் இடையிலான 804 கி.மீ. தூர மாநில எல்லையில் பல்வேறு பகுதிகளில் எல்லைப் பகிா்வு தொடா்பாக இரு மாநிலத்துக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இரு மாநிலங்களுக்கும் இடையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் கடந்த ஏப்ரல் மாதம் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT