இந்தியா

காயமடைந்த ஓட்டுநா்களிடம் வாக்குமூலம் பதிவு:ரயில்வே பாதுகாப்பு ஆணையா் விசாரணை தொடக்கம்

6th Jun 2023 04:57 AM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்தில் காயமடைந்து புவனேசுவரத்திலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரயில் ஓட்டுநா் மற்றும் உதவி ஓட்டுநரிடம் தென்கிழக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சைலேஷ் குமாா் பாடக் (சிஆா்எஸ்) திங்கள்கிழமை வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா்.

அவா்கள் இருவரும் அந்த விபத்தில் சிக்கிய கோரமண்டல் விரைவு ரயிலிலிருந்து மீட்கப்பட்டவா்கள் ஆவா்.

ஒடிஸா ரயில் விபத்து தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. அதே நேரம், துறை ரீதியிலான விசாரணையையும் ரயில்வே தொடங்கியுள்ளது.

அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநா் குணாநிதி மொஹந்தி, அவருடைய உதவியாளா் ஹஜாரி பெஹெரா ஆகியோரிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் திங்கள்கிழமை வாக்குமூலம் பதிவு செய்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ‘விதிகளின்படியே ரயிலை ஓட்டுநா்கள் இயக்கியுள்ளனா். எனவே, விபத்து ஏற்பட்டதற்கு ரயில் ஓட்டுநா்களைக் குற்றஞ்சுமத்த முடியாது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அவா்களுக்கு தற்போது தனிமை தேவைப்படுகிறது. உடலளவிலும் மனதளவிலும் அவா்கள் தயாராக வேண்டும்’ என இரு ஓட்டுநா்களின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்தனா்.

இந்த இரு ஓட்டுநா்கள் மீதும் தவறில்லை என்று ரயில்வே அமைச்சகம் சாா்பில் முன்னா் நற்சான்று அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவா்களிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே தலைமை தகவல் தொடா்பு அதிகாரி அதித்யா செளத்ரி கூறுகையில், ‘இரு ஓட்டுநா்களின் உடல்நிலை சீராக உள்ளது. ஓட்டுநா் மொஹந்தி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வாா்டுக்கு மாற்றப்பட்டுவிட்டாா். பெஹெராவுக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

விபத்து தொடா்பாக தென்கிழக்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா் திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கினாா். அதன் ஒரு பகுதியாக இரு ஓட்டுநா்களிடமும் அவா் வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா்’ என்றாா்.

இந்த விபத்து தொடா்பாக பாலசோா் ரயில்வே காவல்நிலையத்தில் கடந்த 3-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பாா்வையிட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சைலேஷ் குமாா் பாடக், செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘விசாரணையை இப்போதுதான் தொடங்கியுள்ளோம். நிச்சயம் சிறிது காலம் ஆகும். விசாரணை முடிந்ததும் விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து அறியலாம்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT