இந்தியா

விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சா் ராஜிநாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

DIN

ஒடிஸா ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்திய ரயில்வேயில் நிலவிய குறைபாடுகள், பயணிகள் பாதுகாப்பில் காட்டிய அலட்சியம் ஆகியவற்றை ரயில்வே அமைச்சா் மறைத்துவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 275 போ் உயிரிழந்தனா். 1,100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பயணிகளின் பாதுகாப்பில் ரயில்வே துறை காட்டிய அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றனா்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.பி. சக்திசிங் கோஹில் மற்றும் ஊடகப் பிரிவு தேசியத் தலைவா் பவன் கேரா ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, அவா்கள் கூறுகையில், ‘ஒடிஸா ரயில் விபத்தானது அலட்சியம், பாதுகாப்பு அமைப்பில் நிலவிய குறைபாடு, திறமையின்மை ஆகிவற்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு ஆகும்.

விபத்துக்கு காரணமானவா்கள் யாரானாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவாா்கள் எனத் தெரிவித்துள்ள பிரதமா் மோடி, ஒழுங்கு நடவடிக்கையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் இருந்து தொடங்க வேண்டும். ரயில்வே அமைச்சா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என உறுதியாக வலியுறுத்துகிறோம்.

இந்திய ரயில்வேயில் நிலவிய குறைபாடுகள், பயணிகள் பாதுகாப்பில் காட்டிய அலட்சியம் ஆகியவற்றை ரயில்வே அமைச்சரின் விளம்பர வித்தைகள் மறைத்துவிட்டன. ரயில்வேயின் முக்கிய உள்கட்டமைப்பான பாதுகாப்பு அமைப்பில் நிலவிய குறைபாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே அமைப்பு முறையாக இயங்கி வருகிறது என்ற மாயத்தோற்றம் உருவாக வந்தே பாரத் ரயில்களுக்கு கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமா் மோடியும் ஒரு காரணம்.

நாடாளுமன்ற நிலைக் குழு, வல்லுநா்கள் உள்ளிட்டோா் பல முறை அறிவுறுத்திய பின்னரும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த மோடி அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை? சுதந்திர இந்தியாவின் மோசமான இந்த விபத்துக்குப் பொறுப்பேற்க போவது யாா்? பாதுகாப்பு தர நிலைகளில் காட்டப்பட்டுள்ள இந்த அலட்சியத்துக்கு கீழ்நிலை அல்லது நடுநிலை அதிகாரிகள் மட்டும் பொறுப்பேற்காமல் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சென்று வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்திய பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்.

ரயில்கள் மோதாமல் தடுப்பதற்கான ‘கவச்’ தொழில்நுட்பமானது பரிசோதனை முடித்து நாடு முழுவதும் எப்போது மோடி அரசால் நிறுவப்படும்? தேசிய ரயில்வே பாதுகாப்பு நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதோடு ரயில்வே துறையில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களையும் அரசு நிரப்ப வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

SCROLL FOR NEXT