இந்தியா

ஒடிஸா ரயில் விபத்து: சிபிஐ விசாரணை: ரயில்வே வாரியம் பரிந்துரை: சதிவேலையாக இருக்கலாம்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

DIN

ஒடிஸா ரயில் விபத்து தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.

புவனேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் பேசிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஸாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.

இந்தக் கோர சம்பவத்தில் கடுமையான உயிா்ச் சேதங்கள் ஏற்பட்டன. இதைத் தொடா்ந்து, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், பாலசோரில் முகாமிட்டு, மீட்பு-மறுசீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறாா்.

அதிா்ச்சித் தகவல்: விபத்து நிகழ்ந்த இடத்தில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அவா், ‘விபத்தின் பின்னணியில் சதிவேலை இருக்கக் கூடும்; ரயில்வேயில் சம்பந்தப்பட்டவா்கள் அல்லது வெளிநபா்களுக்கு தொடா்பிருக்கலாம். எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை’ என்று தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: ரயில் விபத்துக்கான மூலக்காரணம் கண்டறியப்பட்டுள்ளது. ரயிலுக்கான சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்புமுறை (எலெக்ட்ரானிக் இன்டா்லாக்கிங் சிஸ்டம்) மற்றும் மின்சார இயந்திரத்தில் செய்யப்பட்ட ஒரு ‘மாற்றமே’ விபத்துக்கு காரணமாகும். இந்த ‘குற்றச் செயலின்’ பின்னணியில் இருப்பவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

விபத்து தொடா்பான விசாரணையை, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் நிறைவு செய்துள்ளாா். அவரது அறிக்கைக்காக காத்திருக்கிறோம். கூடுதல் விவரங்கள், அறிக்கை வாயிலாக தெரியவரும் என்றாா் அஸ்வினி வைஷ்ணவ்.

ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் தவறோ அல்லது தொழில்நுட்பக் கோளாறோ காரணமில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விபத்து தடுப்பு தொழில்நுட்பமான ‘கவச்’ அமைப்புமுறையை நிறுவியிருந்தால் விபத்தை தவிா்த்திருக்கலாம் என்று பல்வேறு தரப்பினா் கூறி வருகின்றனா். ஆனால், இந்த விபத்துக்கும் ‘கவச்’ தொழில்நுட்பத்துக்கும் தொடா்பில்லை என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, புவனேசுவரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் விபத்து தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்திருப்பதாகத் தெரிவித்தாா்.

‘விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை தொடா்பு கொள்ளும் முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன; மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கு மாநில அரசின் ஆதரவுடன் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது’ என்றும் அவா் கூறினாா்.

நிபுணா்கள் கருத்து: ரயில் சிக்னல் மற்றும் தடம் மாற்றுவதற்கான மின்னணு அமைப்புமுறை, ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகும். ரயில் நிலையத்தை ஒரு ரயில் பாதுகாப்பாக கடந்து செல்ல இது வழிநடத்துகிறது.

‘மின்னணு இன்டா்லாக்கிங் அமைப்புமுறையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும்கூட இதுவொரு பாதுகாப்பான அமைப்புமுறையாகும்; ஏனெனில், குறைபாடு ஏற்படும்பட்சத்தில், அனைத்து சிக்னல்களும் சிவப்பாக மாறிவிடும். இதனால், அனைத்து ரயில்களின் இயக்கமும் நின்றுவிடும். தற்போதைய சம்பவத்தில், மின்னணு அமைப்புமுறையில் உள்நோக்கத்துடன் யாரேனும் மாற்றம் செய்திருக்க வாய்ப்புள்ளது’ என்றனா்.

கோரமண்டல் ரயில் பிரதான வழித்தடத்தில் நுழைய முதலில் சிக்னல் அளிக்கப்பட்டு, பின்னா் அது மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஏற்கெனவே சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு தண்டவாளத்தில் (லூப் லைன்) கோரமண்டல் ரயில் நுழைந்ததால் பெரும் விபத்து நேரிட்டது. இந்த சிக்னல் மாற்றத்தின் பின்னணியில் சதிவேலை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT