இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: முற்றிலும் மனிதத் தவறுதான் காரணம்!

5th Jun 2023 09:11 PM

ADVERTISEMENT


ஒடிசா ரயில் விபத்துக்கு முற்றிலும் மனிதத் தவறுதான் காரணம் என ரயில்வே வட்டாரங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ரயில்வேத் துறை வட்டாரங்களில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து முற்றிலும் மனித தவறால் நடந்தது. என்ன பிழை என்பதை அறிந்து அதற்கு காரணமான இருவரையும் கண்டறிந்துள்ளோம் என ரயில்வே துறையில் இருந்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்திலுள்ள பஹாநாக பஜாா் பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1199 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

இந்த விபத்து எப்படி நடந்தது? விபத்துக்கு காரணம் என்ன? விரிவாகக் காண்போம்.

பஹாநாக பஜாா் ரயில் நிலையம் அருகே இந்த கோர விபத்து நடந்தது. இந்த ரயில் நிலையம் அருகேவுள்ள தண்டவாளத்தில் நான்கு வழித்தடங்கள் உள்ளன. இரு முக்கிய வழித்தடங்களும் (மெயின் லைன்), இரு கிளை வழித்தடங்களும் (லூப் லைன்) உள்ளன. 

மேல், கீழ் என்ற இரு முக்கிய வழித்தடத்தில் வரும் சில ரயில்கள் கிளை வழித்தடத்தில் இடைநிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். தண்டவாளத்தின் ஒரு பகுதியை நகர்த்துவதன் மூலம் முக்கிய வழித்தடத்திலிருந்து கிளை வழித்தடத்துக்கு ரயில் நகரும். 

இதன்மூலம் முக்கிய வழித்தடத்தில் வரும் ரயில் இடையூறு இன்றி கடந்து செல்லும். விபத்து நடந்த அன்றும், சரக்கு ரயில் கிளை வழித்தடத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

கிளை வழித்தடத்துக்கு சரக்கு ரயில் சென்ற பிறகு, தண்டவாளத்தின் சிறு பகுதியை முன்பு இருந்ததுபோல் முக்கிய வழித்தடத்துக்கு நகர்த்த வேண்டும். அதன் பிறகு முக்கிய வழித்தடத்தில் வரும் ரயிலுக்கு சமிக்ஞை (பச்சை சிக்னல்) கொடுக்கப்படும்.

ஆனால், சம்பவம் நடந்த அன்று, கிளை வழித்தடத்திலிருந்து முக்கிய வழித்தடத்துக்கு தண்டவாளம் நகர்த்தப்படவில்லை. முக்கிய வழித்தடத்தில் வந்த கோரமண்டல் ரயிலுக்கும் பச்சை சமிக்ஞை கொடுக்கப்பட்டுள்ளது. 

காரக்பூரில் உள்ள தரவுகளின்படி, பஹாநாக பஜாா் ரயில் நிலையத்தில் உள்ள மின்னணுp பெட்டியில் (பேனல்) கிளை வழித்தடத்திலிருந்து முக்கிய வழித்தடத்துக்கு தண்டவாளம் நகரவில்லை என்பது சிவப்பு நிறத்தில் சில விநாடிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்தில், நிலைய மேலாளர் அதை கவனிக்கவில்லை. 

கிளைவழித்தடத்துக்கு மாறிய தண்டவாளப் பகுதி முக்கிய வழித்தடத்துக்கு மாறாத நிலையில், 128 கிலோமீட்டர் வேகத்தில் வந்த கோரமண்டல் ரயில், அதே வேகத்தில் கிளை வழித்தடத்தில் நுழைந்து சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

பஹாநாக பஜாா் ரயில் நிலைய மேலாளர் சிவப்பு நிற எச்சரிக்கையை கவனித்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என தகவலறிந்த ரயில்வே வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மற்றொரு மனித தவறு குறித்து விளக்கிய ரயில்வே வட்டாரத்தைச் சேர்ந்தவர், முக்கிய வழித்தடம் மற்றும் கிளை வழித்தட சந்திப்பில் சில பிரச்னைகள் இருந்ததாகவும், அதனை சிக்னல் பராமரிப்பாளர் சரி செய்ததாகவும் குறிப்பிட்டார். அதைச் சரிபார்த்த தொழில்நுட்ப வல்லுநர், மின்னணு பெட்டிக்கு சிக்னலுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால், தண்டவாளம் எந்தத் திசையில் உள்ளது என்பதை அறியாமல், நிலைய மேலாளர் முக்கிய வழித்தடத்திலுள்ள (மெயின் லைன்) ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்திருக்கலாம். 

பழுது பார்த்த பிறகு தண்டவாளத்தின் சந்திப்பு எந்த திசையில் உள்ளது என்பதை நிலைய மேலாளர் பரிசோதித்துப் பார்த்திருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம். 

ரயில்வே சிக்னல் அமைப்பு தவறுகளுக்கு இடமளிக்காது. அதாவது, சிக்னலில் பிரச்னை என்றால், முற்றிலும் சிவப்பு நிறமாக மட்டுமே ஒளிரும். இதனால், ரயில்வே நிலைய மேலாளர் ரயில்களுக்கு பச்சை சிக்னல் கொடுக்க முடியாது. எந்த ரயிலும் கடக்க முடியாது. ஆனால், ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக குறுக்குவழியில் பழுது பார்க்கப்பட்டதால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. 

சில ரயில்வே நிபுணர்கள் கூறுகையில், சிக்னல் அணைக்கப்பட்டு முக்கிய மற்றும் கிளை வழித்தட சந்திப்பு கோளாறு சரி செய்திருக்க வாய்ப்புள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டனர். 

ரயில் விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) தெரிவித்திருந்தார். மின்னணு இன்டர்லாக் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT