ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த மூன்று ரயில் விபத்தில் இன்று காலை வரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த ஜூன் 2-ஆம் தேதி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 275 பேர் பலியாகினர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
படிக்க: சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் கன மழை: மக்கள் மகிழ்ச்சி!
இதுகுறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா திங்கள்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில்,
ரயில் விபத்தில் பலியானவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றும் 124 சடலங்கள் அடையாளம் காணப்படும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
உரியச் செயல்முறைக்குப் பிறகு அனைத்து உடல்களும் தொடர்புடையவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடல்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அரசே ஏற்கும் என்று அவர் தெரிவித்தார்.