இந்தியா

ஒடிசா: சவக்கிடங்கில் மகனை உயிரோடு கண்டுபிடித்த தந்தையின் பாசப்போராட்டம்

5th Jun 2023 02:49 PM

ADVERTISEMENT


கொல்கத்தா: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் தந்தை.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 275பேர் பலியாகினர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதாக செய்தியைப் பார்த்ததும் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு, விபத்துப் பகுதிக்குச் சென்று, சவக்கிடங்கில் உயிரோடு இருந்த தனது மகனை மீட்டு கொல்கத்தாவுக்கே அழைத்து வந்திருக்கிறார் ஹெலராம் மாலிக்.

இவரது மகன் பிஸ்வாஜித் மாலிக் (24), உயிர்பிழைத்து வந்து, நிச்சயம் தனது சூப்பர் ஹீரோ தந்தைக்கு நன்றிசெலுத்தியே ஆகவேண்டும்.

ADVERTISEMENT

ரயில் விபத்து குறித்து வெள்ளிக்கிழமை இரவு தகவல் அறிந்ததும், அப்போதுதான் அந்த ரயிலில் தனது மகனை ஏற்றிவிட்டு வந்த ஹெலராம் துடிதுடித்துப் போனார். மகனை கைப்பேசியில் அழைத்தபோது, அவர் உயிரோடு இருக்கிறார், ஆனால் கடுமையான வலியால் துடித்துக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது.

விபத்து நடந்தது தானிருக்கும் பகுதியிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால், ஒரு ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு உறவினருடன் சம்பவ இடத்துக்குச் செல்கிறார்.

எங்கு தேடியும் தனது மகன் கிடைக்கவில்லை. மருத்துவமனைகளில் சென்று தேடுகிறார். இல்லை. மகன் இல்லை. கடைசியாக அவருக்குக் கிடைத்த பதில்.. அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கான முகவரி.

அங்கே செல்ல மனமே இல்லாமல், தனது மகன் உயிரோடுதான் இருப்பார் என்ற நம்பிக்கையோடு, வேறுவழியே இல்லாமல் செல்கிறார். உயிரிழந்தவர்களின் உடல்களைக் காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்களுடன் அவர் வாதாடிக்கொண்டிருக்க, பலியானவர்களின் உடல்களுக்கு இடையே ஒருவரின் கை அசைவதைக் கண்டு, அங்குச் சென்றுப் பார்த்தால், அது ஆம்.. அவரது மகன்தான்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிஸ்வாஜித்தை உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு, முதலுதவி சிகிச்சை செய்துக்கொண்டு கொல்கத்தாவுக்கே அழைத்து வந்து, மருத்துவமனையில் அனுமதித்து முதற்கட்ட அறுவை சிகிச்சை முடிந்து, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கால்களில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இப்படி உயிரோடு இருப்பவர்கள் சவக்கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானோர் மருத்துவத் துறையை சாராதவர்கள். அதனால்தான் படுகாயமடைந்து நினைவிழந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ளாமல், சவக்கிடங்கில் போடப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT