இந்தியா

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

DIN


புதுதில்லி: பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12 ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக பேசி வருகின்றனர். 

இதுதொடர்பாக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்து மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி குறித்து பேசி வருகிறார். 

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பு குறித்து பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு இது. நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். கொள்கை ரீதியான போரில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய நிறுவனங்கள் மீதான தாக்குதலை ஒற்றுமையுடன் எதிர்த்துப் போராடுவோம் என்று தெரிவித்திருந்தார். 

நிதிஷ்குமார் கூறுகையில், எங்களால் முடிந்தவரை பல கட்சிகளை ஒன்றிணைத்து செயல்பட முயற்சிப்போம் என்று தெரிவித்தார். இது வரலாற்று சந்திப்பு என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார். 

பின்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து நிதிஷ்குமார் பேசினார். பின்னர், என்னை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என மம்தா தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பலரையும் சந்தித்தார். மே மாதம் ஜார்கண்ட் முதல்வர் , சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரை நிதிஷ் சந்தித்தார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த நிதிஷின் முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்பட்டது. தில்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்று, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளை "ஒருங்கிணைக்கும்" நடவடிக்கையாக பல தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

இதையடுத்து பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் ஜூன் 12 ஆம் தேதி பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும் என பேசப்பட்டது. 

மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கு சாத்தியமான தொகுதிகளை நிதிஷ் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ள குறைந்தபட்சம் 450 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை உறுதி செய்வதே எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் செயல் இலக்கு.

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற கோர ரயில் விபத்தின் காரணமாக, ஆலோசனை கூட்டத்தை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில், பிகார் தலைநகர் பாட்னாவில் வரும் 12 ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் 12 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியது. இரு தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வரும் 15 ஆம் தேதி இந்தியா திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

ரயிலில் எலி, அதிர்ச்சியான பயணி: ரயில்வே துறையின் பதில்?

SCROLL FOR NEXT