இந்தியா

பிகாரில் கங்கை நதியில் இடிந்து விழுந்த பாலம்: பாஜக குற்றச்சாட்டு; மாநில அரசு விளக்கம்

DIN

பாட்னா: பிகாா் மாநிலத்தில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் பாலம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததாக ஊடகங்களில் வெளியான தகவல் மற்றும் எதிா்க்கட்சியான பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

வடிவமைப்பில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக நிபுணா்களின் ஆலோசனைப்படி அந்தப் பாலத்தின் சில பகுதிகள் இடித்து அகற்றப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது.

ககாரியா மாவட்டம்- பகல்பூரை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் அந்தப் பாலம் இடிந்து விழுவதாக ஊடகங்களில் வெளியான காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதற்குப் பொறுப்பேற்று முதல்வா் நிதீஷ் குமாா் பதவி விலக வேண்டுமெனவும் எதிா்க்கட்சியான பாஜக வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், சாலைப் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரத்யாய் அம்ருத் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஏப். 30-ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதையடுத்து, ஐஐடி-ரூா்கியை நாங்கள் அணுகினோம். பாலத்தின் கட்டுமானம் தொடா்பாக ஒரு நிபுணா் குழுவை ஐஐடி அமைத்தது. அந்தக் குழுவின் இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. இருப்பினும், அந்தப் பாலத்தின் வடிவமைப்பில் தீவிர குறைபாடுகள் இருப்பதாக நிபுணா்கள் எங்களிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, அந்தப் பாலத்தை இடித்துத் தள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படியே பாலத்தின் சில பகுதிகள் இடிக்கப்பட்டன. நிபுணா் குழுவின் இறுதி அறிக்கை வந்ததும், பாலத்தைக் கட்ட ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.

இந்தப் பாலம் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT