ஒடிஸாவில் 275 பேரை பலி கொண்ட ரயில் விபத்து தொடா்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றுகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக வழக்குரைஞா் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில் விபத்து தொடா்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதில் ரயில்வே தொழில்நுட்பம் சாா்ந்த நிபுணா்களும் இடம்பெற வேண்டும். ரயில் பயணிகளுக்கு உள்ள பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறையை பரிந்துரைக்க வேண்டும். ரயில் பயணப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அவா்கள் அளிக்க வேண்டும்.
ரயில்களை ஒன்றுடன் மற்றொன்று மோதாமல் பாதுகாக்கும் ‘கவச்’ முறையை விரைவில் அனைத்து ரயில் தடங்களில் அமல்படுத்த வேண்டும். இந்த பாதுகாப்பு இல்லாததால்தால் ஒடிஸாவில் விபத்து ஏற்பட்டு பலா் உயிரிழந்துவிட்டனா்.
விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், விபத்துக்கான உண்மையான காரணத்தையும் கண்டறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.