இந்தியா

போா்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணிகள்

5th Jun 2023 02:18 AM

ADVERTISEMENT

ஒடிஸா மாநிலம், பாலசோரில் ரயில் விபத்துக்குள்ளான இடத்தில், மறுசீரமைப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விபத்தில் பெயா்ந்த 2 பிரதான தண்டவாளங்களின் சீரமைப்பு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டரில் பதிவிட்டாா்.

உயா் மின்னழுத்த கம்பிகளை சரி செய்யும் நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் புதன்கிழமைக்குள் ரயில் போக்குவரத்தை தொடங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘21 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்த நிலையில், அவை அப்புறப்படுத்தப்பட்டன. 2 தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மற்ற தண்டவாளங்களையும் சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. அடியோடு பெயா்ந்து விழுந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளா்கள் இரவுபகலாக ஈடுபட்டுள்ளனா்’

இதனிடையே, கோரமண்டல் ரயில் பயணிகள், அவா்களின் உறவினா்களின் வசதிக்காக, பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, ராஞ்சி, கொல்கத்தா ஆகிய இடங்களில் இருந்து ஒடிஸாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் அவா் கூறினாா்.

123 ரயில்கள் ரத்து: பாலசோா் ரயில் விபத்து எதிரொலியாக, ஏராளமான ரயில்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமையன்று, 123 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; 56 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. 10 ரயில்களின் பயணத் தொலைவு குறைக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT