இந்தியா

சீரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி

4th Jun 2023 12:31 PM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்தில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகள் குறித்து மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். 

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று காலை முதலே  விபத்து நடந்த பாலசோர் பகுதியில் நேரில் முகாமிட்டு மறுசீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு வருகிறார். 

மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார். 

ADVERTISEMENT

ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் உதவினர். 

இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், பாலசோர் பகுதியில் காலை முதலே சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,

ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடைபெற்ற இடத்தை நேற்று பார்வையிட்டார். சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சீரமைப்புப் பணிகளை இன்று முழுவதுமாக முடிப்போம். ரயில் விபத்தில் சிக்கிய உடல்கள் அனைத்தும் இங்கிருந்து மருத்துவமனைக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகளை முழுமையாக முடித்து வரும் புதன்கிழமைக்குள் ரயில் சேவையை இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

இதனிடையே, சீரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு கேட்டறிந்தார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT