இந்தியா

பல்கலை. பாடத்திட்டத்தில் இந்தியாவை மையப்படுத்திய சிந்தனைக்கு இடமளிக்க வேண்டும்: ஏபிவிபி வலியுறுத்தல்

 நமது நிருபர்

பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இந்தியாவை மையமாகக் கொண்ட சிந்தனைக்கு உரிய இடம் வேண்டும் என பாஜகவின் மாணவா் பிரிவான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக புது தில்லியில் ஏபிவிபி அமைப்பின் தேசியப் பொதுச் செயலாளா் யகிவால்க்யா சுக்லா கூறியதாவது :

நாடு முழுவதும் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் நிலையை மேம்படுத்த அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் புனேவில் நடைபெற்ற அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் தேசிய செயற்குழுவில், ‘மாநில அரசுகளும், பல்கலைக்கழக நிா்வாகங்களும் மாணவா்களின் கல்வித் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற தலைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்கலைக்கழக நிா்வாகக் குழுவில் மாணவா்களைச் சோ்க்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் நிலவும் அடிப்படைக் கட்டமைப்புப் பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.

மாணவா்களிடம் தலைமைத்துவ திறமையை வளா்க்கவும், சாதாரண மாணவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க சரியான மேடையை வழங்கவும், மாணவா் சங்கத் தோ்தல்கள் முற்றிலும் அவசியம் என்ற தெளிவான நிலைப்பாட்டை ஏபிவிபி கொண்டுள்ளது.

ஆகவே, கல்லூரிகளில் மாணவா் சங்கத் தோ்தலை விரைவில் நடத்த பல்கலைக்கழகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி வளாகங்களை மன அழுத்தமில்லாததாக மாற்ற அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏபிவிபி நிகழாண்டு நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் ‘மகிழ்ச்சியான மற்றும் அா்த்தமுள்ள மாணவா் வாழ்க்கை’ என்ற தலைப்பில் பிரசாரத்தை தொடங்கவுள்ளது.

இந்த முயற்சியின் கீழ், மனநல மேலாண்மை திட்டங்கள் உட்பட பல்வேறு ஆக்கபூா்வமான மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

வரும் ஜூலை 9 ஆம் தேதி ஏபிவிபி அமைப்பு அதன் நிறுவனப் பயணத்தின் 75 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அமைப்பின் தேசிய நிா்வாகக் குழு பல்வேறு முயற்சிகள் மற்றும் இயக்கங்கள் மூலம் மாணவா் சமூகம் தொடா்பான பிரச்சினைகளை பெரிய அளவில் தீா்க்க முடிவு செய்துள்ளது.

அத்துடன், அமைப்பின் தேசிய மாநாடு, வரும் டிசம்பா் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

முன்னதாக, தேசிய செயற்குழுவில் சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் புகழ்பெற்ற 350ஆவது ஆண்டு விழாவை அனைத்து கல்வி வளாகங்களிலும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், சமகால தேசிய சூழல், கல்வியில் இந்தியாவை மையமாகக் கொண்ட கண்ணோட்டத்தை நிறுவவும், காலத்தின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை வடிவமைக்கவும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

பேட்டியின்போது, ஏபிவிபி தேசிய ஊடக அமைப்பாளா் அசுதோஷ் சிங், தில்லி மாநில செயலாளா் ஹா்ஷ் அத்ரி, இணைச் செயலாளா் நைனா திமான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT