இந்தியா

ஜெர்மனியில் சிக்கிய பெண் குழந்தை: ஒப்படைக்கக் கோரி 59 எம்.பி,க்கள் கடிதம்

DIN

புது தில்லி: இந்தியப் பெற்றோரிடம் இருந்து ஜெர்மனி அதிகாரிகளால் கடந்த 2021 ஆம் ஆண்டு பறித்துச் செல்லப்பட்ட இந்திய பெண் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் தலையிடக் கோரி ஜெர்மனி தூதருக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகளைச் சேர்ந்த 59 எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த பாவேஷ் ஷா-தாரா தம்பதியர் ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் வசித்து வந்தனர். அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பாவேஷ் ஷா பணியாற்றி வந்தார். இத்தம்பதியருக்கு அரிஹா ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், அக்குழந்தையை அதன் பெற்றோர்கள் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டி அவர்களிடம் இருந்து ஜெர்மனி நாட்டின் குழந்தைகள் நல அமைப்பான ஜூகன்டாம்டின் அதிகாரிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பறித்துச் சென்றனர். 

இந்நிலையில் அந்தக் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் தலையிடக் கோரி ஜெர்மனி தூதருக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகளைச் சேர்ந்த 59 எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். இக்கடிதத்தில் ஹேமமாலினி (பாஜக), அதீர் ரஞ்சன் சௌதரி (காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), கனிமொழி கருணாநிதி (திமுக), மஹுவா மொய்த்ரா (திரிணமூல் காங்கிரஸ்), அகதா சங்மா (என்பிபி), ஹர்சிம்ரத் கௌர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), மேனகா காந்தி (பாஜக) பிரணீத் கௌர் (காங்கிரஸ்), சசி தரூர் (காங்கிரஸ்), ஃபரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி) உள்ளிட்ட எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். 

கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:
குழந்தை அரிஹா ஷாக்கு மூலாதாரப் பகுதியில் ஒரு விபத்து காரணமாக காயம் ஏற்பட்டது. இதற்காக அக்குழந்தை மருத்துவனையில் சேர்க்கப்பட்டது. இது தொடர்பாக அக்குழந்தையின் பெற்றோர் மீது குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தில் குழந்தையின் பெற்றோர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூறாமல் ஜெர்மனி போலீஸôர் கடந்த 2022, பிப்ரவரியில் இந்த வழக்கை கைவிட்டனர். குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என்று அக்குழந்தை சிகிச்சை பெற்ற மருத்துவனையும் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

எனினும் குழந்தை அரிஹா ஷாவை குழந்தைகள் நல அமைப்பான ஜூகன்டாம்டின், அதன் பெற்றோரிடம் திருப்பி ஒப்படைக்கவில்லை. அக்குழந்தையை நிரந்தரமாக தங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்வதற்கு அனுமதி கோரி அந்த அமைப்பு ஜெர்மனி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. 

அக்குழந்தையை கவனித்துக் கொள்ளும் திறன் அதன் பெற்றோரிடம் இல்லை என்றும் ஜெர்மனி காப்பகத்தில் அக்குழந்தை நன்றாக கவனித்துக் கொள்ளப்படும் என்று அந்த அமைப்பு வாதிட்டது.

இக்குழந்தையை ஒரு காப்பகத்தில் இருந்து மற்றொரு காப்பகத்துக்கு மாற்றுவது குழந்தையின் நலனை பாதிக்கும். குழந்தையைச் சந்திக்க இரு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே பெற்றோர் அனுமதிக்கப்படுகின்றனர். அதன் விடியோ காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன.

இதில் இன்னொரு கோணமும் உள்ளது. இந்தக் குழந்தை சைவ உணவு சாப்பிடும் ஜைன மத நம்பிக்கை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்ததாகும். தற்போது இக்குழந்தை ஓர் அந்நிய கலாசார சூழலில் வளர்க்கப்படுவதுடன் அதற்கு அசைவ உணவும் அளிக்கப்படுகிறது. 

ஒரு ஜெர்மன் குழந்தை வலுக்கட்டாயமாக இந்திய குழந்தைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டால் அதை உங்கள் நாடு எவ்வாறு கருதும் என்பதை நீங்கள் உணர்வுபூர்வமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். எனவே குழந்தை அரிஹா ஷாவை ஜைன மதக் குடும்பம் ஒன்றிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசு, ஜெர்மனி அரசைக் கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை அரிஹாவை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியா, ஜெர்மனியை கேட்டுக் கொண்டுள்ளது. அந்தக் குழந்தை தனது மொழி, கலாசாரம், மத, சமூகச் சூழலில் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT