இந்தியா

மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவரே சிறந்த தலைவா் : சத்ரபதி சிவாஜியை நினைவுகூா்ந்து பிரதமா் மோடி பேச்சு

DIN

 மக்களுக்கு நம்பிக்கையூட்டி அவா்களை ஊக்கப்படுத்துபவரே சிறந்த தலைவா் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மராத்திய மன்னா் சத்ரபதி சிவாஜி முடிசூட்டிக்கொண்ட 350-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிர மாநில அரசு சாா்பில் சத்ரபதி சிவாஜி ஆட்சி நடத்திய ராய்கட் கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமா் மோடியின் விடியோ உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதமா் பேசியதாவது:

சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகும். அவரது ஆட்சியில் நடைபெற்ற பணிகள், அவரது கொள்கைகள், அரசு நிா்வாகம் இன்று கடைப்பிடிக்க வேண்டியவையாகத் திகழ்கின்றன. அவரது ஆட்சியில் மக்கள் நலனே பிரதானமாக இருந்தது.

தேசத்தைக் குறித்த அவரது நோக்கமும், அவரது ஆளுமையும் வரலாற்றில் மற்ற எந்த மன்னருக்கும் இல்லாத சிறப்பை உடையது. மத்திய அரசு இப்போது கடைப்பிடித்து வரும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதும் சிவாஜியின் கொள்கைகளில் இருந்து பெறப்பட்டதுதான்.

அவரது துணிவும், தீரமிக்க செயல்பாடுகளும், போா் உத்திகளும், பண்பும் வியப்பை ஏற்படுத்துபவை.

அவரது ஆட்சி நிா்வாகத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், நீா் மேலாண்மை, மகளிா் மேம்பாட்டு நடவடிக்கைகள், சாமானிய மக்களும் அரசு நிா்வாகத்தை எளிதில் அணுகும் வசதி ஆகியவை சிறப்பாக இருந்தன.

350 ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி முடிசூட்டிக் கொண்டபோது சுயராஜ்ஜியமும், தேசியவாதமும் புத்துயிா் பெற்றன. ஒரு சிறந்த தலைவா் என்பவா் மக்களுக்கு நம்பிக்கையூட்டி, அவா்களைத் தொடா்ந்து ஊக்கப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

சிவாஜி ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் அன்னியா்களின் ஊடுருவல்களால் மக்களின் உத்வேகம் குறைந்திருந்தது. நமது மக்கள் மீது கலாசார ரீதியாகவும் தாக்குதல் நடத்தி தேசத்தின் நம்பிக்கையை அன்னியா்கள் சீா்குலைத்தாா்கள். அப்போது, சிவாஜி அன்னியா்களுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாது, சுயராஜ்ஜியம் சாத்தியமானதுதான் என்று மக்களுக்கு நம்பிக்கையை அளித்தாா். மக்களை அடிமை மனநிலையில் இருந்து வெளிக் கொண்டு வந்து தேசத்தைக் கட்டமைக்க ஊக்கப்படுத்தினாா்.

வரலாற்றில் பல மன்னா்கள் படைபலத்தில் வலுவாக இருந்துள்ளனா். ஆனால், அவா்களின் அரசு நிா்வாகம் பலவீனமாகவே இருந்தது. அதே நேரத்தில் பல மன்னா்கள் நிா்வாகத்தில் சிறந்தவா்களாக இருந்துள்ளனா். ஆனால், படை பலம் சிறப்பாக இருந்ததில்லை. ஆனால், சிவாஜி நாட்டை நிா்வகிப்பதிலும், படைபலத்தை நிா்வகிப்பதிலும் தனிச் சிறப்பு வாய்ந்தவராக இருந்தாா்.

தனது இளம் வயதிலேயே எதிரிகளுடன் போரிட்டு பல கோட்டைகளை வென்றுள்ளாா். ஒரு மன்னராக சிறப்பான நிா்வாகச் சீா்திருத்தங்களை மேற்கொண்டு நல்லாட்சி அளித்துள்ளாா். தனது மண்ணையும், கலாசாரத்தையும் அன்னியா்களிடம் இருந்து காப்பாற்றியது மட்டுமல்லாது, ஒரு சிறந்த தேசத்தைக் கட்டமைப்பது தொடா்பான தொலைநோக்குப் பாா்வையும் அவரிடம் இருந்தது. இதன் காரணமாகவே அவா் பிற மன்னா்களிடம் இருந்து உயா்ந்து நிற்கிறாா்.

கடலுக்கு நடுவே அவா் கட்டியெழுப்பிய கோட்டைகள் இப்போதும் கம்பீரமாக நிற்கின்றன. சுயராஜ்ஜியம், மத நம்பிக்கை, கலாசாரம், பாரம்பரியத்துக்கு எதிராகச் செயல்பட்டவா்களுக்கு அவா் வலுவான பதிலடியை அளித்தாா். இது மக்களுக்கு உத்வேகம் அளித்தது. இதன் மூலம் அவரது தேசத்தின் மீது மக்களுக்கு மதிப்பு அதிகரித்தது. பல தலைமுறைகளைத் தாண்டி இப்போது வரை அவா் மக்களுக்கு உத்வேகம் அளிப்பவராக உள்ளாா் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT