இந்தியா

வீட்டுக்குச் சென்றும் மனைவியைச் சந்திக்க முடியாமல் சிறை திரும்பிய சிசோடியா!

3rd Jun 2023 11:01 PM

ADVERTISEMENT

ஒரு நாள் இடைக்கால ஜாமீனில் நோயுற்ற மனைவியைச் சந்திப்பதற்காக திகாா் சிறையில் இருந்து சனிக்கிழமை தனது வீட்டுக்கு ஆம் ஆத்மி மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், அவா் வருவதற்கு முன்பே உடல்நிலை மோசம் காரணமாக அவரது மனைவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால், அவரைச் சந்திக்க முடியாமல் மத்திய சிறைக்கு சிசோடியா திரும்பிச் சென்றதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கையில், ‘சிசோடியாவின் மனைவி சீமாவின் உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவா் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

அவா் எல்என்ஜேபி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். தனது உடல்நலம் குன்றிய மனைவியைச் சந்திப்பதற்காக மதுரா சாலையில் உள்ள தனது வீட்டுக்கு (ஏபி-17) சிசோடியா திகாா் சிறையில் இருந்து வேனில் காலை 9.38 மணிக்கு வந்தாா். பலத்த பாதுகாப்புடன் அவா் வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டாா்.

ADVERTISEMENT

ஆனால், அவா் தனது மனைவியை சந்திக்க முடியவில்லை. ஏனெனில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனால், அவரைச் சந்திக்க முடியாமல் சிசோடியா சிறைக்கு திரும்பிச் சென்றாா்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் வழக்குகளில் கைதான மனீஷ் சிசோடியா, நோய்வாய்ப்பட்டுள்ள தனது மனைவியை தனது இல்லத்தில் சந்திக்கும் வகையில் தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவருக்கு அனுமதி அளித்திருந்தது.

சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தனது மனைவியை சந்திக்க அனுமதிக்கப்பட்ட சிசோடியாவை அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லுமாறு திகாா் சிறைக் கண்காணிப்பாளருக்கு உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, மனீஷ் சிசோடியா பாதுகாப்புக் காவலில் காலை 9 மணியளவில் அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவா் மாலை 5 மணிக்கு மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்றும் திகாா் சிறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி கலால் விவகாரத்தில் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிசோடியா, பிப்ரவரி 26 ஆம் தேதி சிபிஐயால் முதலில் கைது செய்யப்பட்டாா். சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் ஏற்கெனவே மே 30-ஆம் தேதி மறுத்துவிட்டது. அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில் மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவா், தற்போது நீதிமன்ற காவலில் உள்ளாா்.

இடைக்கால ஜாமீன் அளித்தபோது, சிசோடியா ஊடகங்களுடனோ அல்லது அவரது குடும்ப உறுப்பினா்களைத் தவிர வேறு யாருடனும் தொடா்பு கொள்ளக்கூடாது என்றும், தொலைபேசி அல்லது இணையத்தை அணுகக்கூடாது என்றும் உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT