இந்தியா

அடுத்தகட்டத்தில் மீட்புப் பணிகள்: விபத்துப் பகுதியில் புல்டோசர்களும் கிரேன்களும்  

3rd Jun 2023 01:38 PM

ADVERTISEMENT

பாலாசோர்: ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே, கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான இடத்தில், ரயில் பெட்டிகளுக்குள் புதைந்து உருக்குலைந்த ரயில் பெட்டிகளை மேலே எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீட்புப் பணிகள் ஓரளவுக்கு முடிவுற்ற நிலையில், ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், கீழே சிக்கியிருக்கும் ரயில் பெட்டிகளை கிரேன்கள் மற்றும் புல்டோசர்களின் உதவியோடு மேலே எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே, சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலியானோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900 பேர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

காயமடைந்தவர்கள் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தமிழக பயணிகளை சென்னை அழைத்து வர புவனேஸ்வரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி தண்டவாளப்பகுதிகளில் சிதறிக்கிடக்கின்றன. சிதறிக் கிடக்கும் ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று ஏறியும், ஒன்றை ஒன்று நசுக்கியபடியும், சில ரயில் பெட்டிகள் உருக்குலைந்து மண்ணில் புதைந்தும், ரயில் பெட்டிகளுக்கு மேலே நீட்டியபடியும் உள்ளன.

இவற்றை ஒன்றன் மீதிருந்து ஒன்று அகற்றி, கீழே இருக்கும் ரயில் பெட்டிகளுக்குள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணி தொடங்கியிருக்கிறது.

தற்காக, கிரேன்களும், புல்டோசர்களும் விபத்துப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை, கீழே இருக்கும் ரயில் பெட்டிகள் மேலே கொண்டு வரப்பட்டால் பலி எண்ணிக்கையும், காயமடைந்தோர் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதற்காக, கிட்டத்தட்ட 200 ஆம்புலன்ஸ்கள், 50 பேருந்துகள், 45 நடமாடும் சிறிய மருத்துவமனைகள் விபத்துப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்திய விமானப் படையும், மருத்துவக் குழுவினருடன், அவசர சிகிச்சை தேவைப்படுவோரை அழைத்து வர இரண்டு ஹெலிகாப்டர்களையும் அனுப்பியிருக்கிறது.

ரயில் விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சிக்னலில் கோளாறு ஏற்பட்டதால் விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT