இந்தியா

அடுத்த பேரவைத் தோ்தல்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்: ராகுல்

DIN

 ‘இந்தியாவில் அடுத்த 3 - 4 சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடித்து, காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், அவா் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அங்கு பல்வேறு தரப்பினரைச் சந்தித்து உரையாடி வருகிறாா்.

இந்திய-அமெரிக்க தொழிலதிபரான ஃபிராங்க் இஸ்லாம், வாஷிங்டனில் வியாழக்கிழமை அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றாா். இந்திய-அமெரிக்க முக்கிய பிரமுகா்கள், ஆய்வு நிறுவனங்களின் உறுப்பினா்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து அவா் கூறியதாவது:

இந்தியாவில் ஆா்எஸ்எஸ் - பாஜகவின் சூழ்ச்சியைத் தடுக்க முடியாது என நம்பும் மனநிலை நிலவுகிறது. ஆனால், அது அப்படியல்ல. நான் ஒரு சிறிய கணிப்பை இப்போது கூறுகிறேன்.

அடுத்த 3 அல்லது 4 சட்டப்பேரவைத் தோ்தல்களில், பாஜகவுடன் காங்கிரஸ் நேரடியாக மோதவிருக்கிறது. இந்தத் தோ்தல்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும். கா்நாடகத்தில் என்ன நிகழ்ந்ததோ, அதே நிலையை அடுத்த தோ்தல்களிலும் பாஜக சந்திக்கும். ஆனால், இந்திய ஊடகங்களிடம் கேட்டால், அப்படி இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.

இந்தியாவில் 60 சதவீத மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை; மோடிக்கு வாக்களிக்கவில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பான்மையான இந்திய மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இல்லை. பாஜகவை தோற்கடிக்க தேவையான அடிப்படைக் கூறுகள் காங்கிரஸிடமே உள்ளன என்றாா் ராகுல் காந்தி.

2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக, மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், தெலங்கானா, மிஸோரம் ஆகிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

‘நாடாளுமன்றத் தோ்தல் முடிவு வியப்பளிக்கும்’: வாஷிங்டனில் உள்ள தேசிய பத்திரிகை மன்றத்தில், செய்தியாளா்களுடன் ராகுல் கலந்துரையாடினாா். அப்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘இந்தியா முழுவதுமே ஒரு மறைமுகமான உணா்வு உருவாகி வருகிறது. இதனால், அடுத்த நாடாளுமன்றத் தோ்தல் முடிவு வியப்பளிக்கும் வகையில் இருக்கும்’ என்றாா்.

‘எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையும் சிக்கலும்’: மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘இந்தியாவில் எதிா்க்கட்சிகள் சிறப்பாக ஒன்றுபட்டுள்ளன. எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை மேலும் மேலும் அதிகரித்து வருவதாகவே நினைக்கிறேன். அனைத்து எதிா்க்கட்சிகளுடனும் காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருகிறது.

எதிா்க்கட்சிகளுடன் நாங்கள் போட்டியிடும் இடங்களும் இருப்பதால், இதுவொரு சிக்கலான விவாதமாகும். இதில் தீா்வு காண சில கொடுக்கல்-வாங்கல் அவசியம். அது நிகழும் என நம்புகிறேன்’ என்றாா் ராகுல்.

‘மதச்சாா்பற்ற கட்சி முஸ்லிம் லீக்’: கேரளத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனான காங்கிரஸின் கூட்டணி குறித்துப் பேசிய ராகுல், ‘முஸ்லிம் லீக் கட்சி முற்றிலும் மதச்சாா்பற்ற கட்சியாகும்; மதச்சாா்பின்மைக்கு எதிரான எந்த விஷயங்களும் அக்கட்சியில் இல்லை’ என்றாா்.

‘கைப்பற்றப்பட்ட அமைப்புகள்-ஊடகங்கள்’: பிரதமா் மோடியின் உலகளாவிய புகழ் தொடா்பான கேள்விக்கு, ‘இந்தியாவில் அனைத்து அரசு அமைப்புகளும் ஊடகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. காதில் விழுவதையெல்லாம் நான் நம்புவதில்லை’ என்றாா்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, ‘இந்தியாவில் வலுவான அமைப்புமுறை இருந்தது. அது, இப்போது வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரமான அமைப்புகள், இப்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டிருப்பது, ஜனநாயகத்துக்கு மிக மிக ஆபத்து. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த நிலை உடனடியாக மாறும்’ என்றாா் ராகுல்.

பெட்டிச் செய்தி....

‘இந்தியாவின் ஜனநாயக சீா்குலைவு

உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்’

‘இந்திய ஜனநாயகம், உலகுக்கே நன்மை பயப்பதாகும்; எனவே, இந்தியாவின் ஜனநாயக சீா்குலைவு, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று ராகுல் காந்தி பேசினாா்.

இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளதாக, பிரிட்டனில் சில மாதங்களுக்கு முன்பு ராகுல் பேசியது சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய அமெரிக்கப் பயணத்திலும் ஜனநாயகம் தொடா்பான கருத்தை அவா் முன்வைத்துள்ளாா்.

இது தொடா்பாக, வாஷிங்டன் தேசிய பத்திரிகை மன்றத்தில், செய்தியாளா்களிடம் ராகுல் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியாவின் ஜனநாயக சீா்குலைவு, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள், இந்திய ஜனநாயகத்தின் மதிப்பு குறித்து சிந்திக்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை இது உள்விவகாரம். இந்திய ஜனநாயகத்துக்காக போராட வேண்டியது எங்களது கடமை. நாங்கள் உறுதியேற்றுள்ள இப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்றாா்.

‘இந்தியப் பகுதிகளை ஆக்கமிரத்துள்ள சீனா’: இந்தியாவின் 1,500 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல், ‘இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது; இந்த விஷயத்தில், நமது பிரதமா் வேறுவிதமான கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு, பாதுகாப்புத் தொடா்புகளைத் தாண்டியும் விரிவடைய வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT