இந்தியா

ஒடிசா ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு: தகவல்

2nd Jun 2023 10:17 PM

ADVERTISEMENT

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 50 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் அருகே கோரமண்டல் விரைவு ரயில் மற்றொரு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே இரு ரயில்கள் மோதிய விபத்தில் பலர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ரயில்கள் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டு உள்ளே பயணிகள் சிக்கியுள்ளனர். இரவுநேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

உள்ளூர் பகுதி மக்கள் மற்றும 100க்கும் மேற்பட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஷாலிமர்-சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் முதற்கட்டமாக 50 பேர் பலியானதாகவும் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் மீட்கப்பட்டோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாடு அறை எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.  அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர்(ஒடிசா): 91 6782262286, (சென்னை) 044-25330952, 044-25330953, 25354771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கோரமண்டல் ரயிலில் வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தால் 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் கூறியதாவது, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விபத்து நேரிட்ட இடத்திற்கு நாளை காலை செல்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதனிடையே மீட்பு பணிகளை துரிதப்படுத்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா விரைகிறார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT