எனது தலைமையிலான அரசு 90 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
தனது தலைமையிலான மாநில அரசு சாதாரண மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், கடைசி 5 ஆண்டுகளில் மாநிலத்தில் எந்த ஒரு புதிய வரியும் விதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தானின் பார்மரில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற உலக தரத்திலான சாலைகள் அவசியம்: நிதின் கட்கரி
அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 90 சதவிகிதத்தை எனது அரசு நிறைவேற்றி விட்டது. மாநிலத்தின் நிதியமைச்சராக 5 பட்ஜெட்டுகளை நான் பேரவையில் சமர்ப்பித்தேன். அந்த 5 பட்ஜெட்டுகளிலும் எந்த ஒரு புதிய வரியும் விதிக்கப்படவில்லை. அதன் காரணத்தினால் பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் புதிய சட்டத்தினை கொண்டு வர வேண்டும். வறட்சி மாநிலமான ராஜஸ்தானுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியினை வழங்க வேண்டும். புவியியல் காரணிகள் காரணமாக மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய ராஜஸ்தானுக்கு அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. இதை மனதில் வைத்து மத்திய அரசு ராஜஸ்தானுக்கு கூடுதல் நிதியினை வழங்க வேண்டும். ராஜஸ்தான் கிழக்கில் உள்ள 13 மாவட்டங்களுக்கு ஆதாரமாக விளங்கும் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.