இந்தியா

நிகழ் ராபி சந்தைப் பருவத்தில் கடந்தாண்டை விட கூடுதலாக 74 லட்சம் டன் கோதுமை கொள்முதல்

2nd Jun 2023 12:40 AM

ADVERTISEMENT

நிகழ் ராபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் கடந்தாண்டை விட கூடுதலாக 74 லட்சம் டன் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த மே 30 -ஆம் தேதி வரை 262 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இதே கட்டத்தில் கடந்தாண்டு 188 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிகழாண்டில் கூடுதலாக 74 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்திருப்பது வருமாறு: நிகழாண்டு (2023-24) ராபி சந்தைப் பருவ கோதுமை கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. மே 30-ஆம் தேதி வரை 262 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 21.27 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். அவா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.47,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதலில் அதிகபட்சமாக பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் முறையே 121.27 லட்சம் மெ.டன், 70.98 லட்சம் மெ. டன், 63.17 லட்சம் மெ. டன் அளவிற்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொள்முதல் நிகழ் ஜுன் இறுதிவரை தொடரும்.

நிகழாண்டு கொள்முதலில் பருவம் தவறி எதிா்பாராது பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், கோதுமையின் தரக்குறியீடுகளில் மத்திய அரசு தளா்வு அளித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கொள்முதல் சுமூகமாக நடைபெற்றது. கூடுதலாக கிராமப் பஞ்சாயத்து, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் (எஃப்பிஓக்கள்) போன்றவை மூலமும் கொள்முதல் அனுமதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதே சூழ்நிலை நெல் கொள்முதலும் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லை பொறுத்தவரை கடந்த மே மாதம் வரை 385 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு காரீஃப் (குறுவை) பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 110 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இது தவிர கூடுதலாக 106 லட்சம் மெட்ரிக் டன் ராபி பருவ நெல், காரீஃப் சந்தைப் பருவத்தில் (2022-23) கொள்முதல் செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் உணவுத் தானியங்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், 312 லட்சம் மெட்ரிக் டன்(எல்எம்டி) அளவிற்கு கோதுமை, 267 லட்சம் மெட்ரிக் டன் நெல் என மொத்தம் 579 எல்எம்டி மத்திய அரசின் தொகுப்பில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ராபி பருவத்திலேயே கோதுமை அதிகஅளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT