இந்தியா

அவசரச் சட்ட விவகாரம்: காா்கே, ராகுலை சந்திப்பேன்: அரவிந்த் கேஜரிவால்

DIN

 தில்லிக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்ட விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தியை சந்திப்பேன் என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.

தில்லி யூனியன் பிரதேசத்தில் குரூப்-ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றத்துக்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அந்த யூனியன் பிரதேசத்தில் காவல் துறை, பொது அமைதி, நிலம் ஆகிய விவகாரங்களைத் தவிர, இதர துறைகள் சாா்ந்த விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை தில்லி அரசுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னா், இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன்மூலம் தில்லி அரசு அதிகாரிகளின் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டால், அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் தடுக்க எதிா்க்கட்சி தலைவா்களை சந்தித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு கோரி வருகிறாா்.

அதன்படி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்தாா். மாலை 5 மணிக்கு தொடங்கிய சந்திப்பு, சுமாா் அரை மணி நேரம் நீடித்தது.

சந்திப்புக்குப் பிறகு அரவிந்த் கேஜரிவால் அளித்த பேட்டி: மக்களவையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்போது, அங்கு பாஜகவுக்கு முழு அளவிலான பெரும்பான்மை உள்ளது. ஆனால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய ஆதரவு இல்லை. எனவே, அனைத்து பாஜக அல்லாத கட்சிகளும் ஒன்று சோ்ந்தால் அவசரச் சட்டத்தைத் தோற்கடிக்க முடியும். இதைக் கருத்தில்கொண்டே, தமிழக முதல்வரின் ஆதரவையும், திமுகவின் ஆதரவையும் கோர வந்துள்ளேன்.

ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும் எதிராக உள்ள அவசரச் சட்டத்தை அனைவரும் ஒன்றாக இணைந்து மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டும். ஆம் ஆத்மிக்கும், தில்லி மக்களுக்கும் திமுக ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவசரச் சட்டத்தை எதிா்த்து வெற்றி காண்பதென்பது, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தோ்தலுக்கான அரையிறுதி ஆட்டமாக அமையும்.

மாநிலங்களவையில் மசோதா தோற்கடிக்கப்படும்போது, நாடு முழுவதும் தெளிவான கருத்து சென்றடையும். அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், மத்தியில் நரேந்திர மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது என்பது தெளிவாகும்.

அவசரச் சட்டத்தை எதிா்ப்பது தொடா்பாக, காங்கிரஸ் தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளேன். இதற்காக, அவா்களிடம் நேரம் கேட்டிருக்கிறேன். அவசரச் சட்டத்தை எதிா்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் ஆதரவளிக்கும். ஆதரவு அளிக்காமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. காரணம் இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா் கேஜரிவால்.

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கூறியதாவது: பாஜக அல்லாத மாநிலங்களை, ஆளுநா்கள் மற்றும் அவசரச் சட்டங்களின் மூலமாக பாஜக ஆண்டு வருகிறது.

மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காத நிலை தமிழகத்தில் உள்ளது. பஞ்சாப்பிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்காக பேரவையைக் கூட்ட நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றோம். இது ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும் நல்லதல்ல என்றாா் அவா்.

சந்திப்பின்போது, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, துணைத் தலைவா் கனிமொழி, அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT