இந்தியா

தில்லி கலால் ‘ஊழல்’ விவகாரம்: அப்ரூவரானாா் ஹைதராபாத் தொழிலதிபா் சரத் சந்திர ரெட்டி

2nd Jun 2023 12:40 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹைதராபாத் தொழிலதிபா் சரத் சந்திர ரெட்டி அப்ரூவா் ஆகியுள்ளாா். இதற்கான அவரது கோரிக்கைக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது. இது தொடா்பாக ரெட்டி தாக்கல் செய்த மனுவை ஏற்று சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் அவருக்கு மன்னிப்பு வழங்கினாா்.

ரெட்டி தனது மனுவில், ‘இந்த வழக்கு குறித்து தானாக முன்வந்து உண்மையை வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன். மேலும், இந்த வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவும் விரும்புகிறேன்’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்த ஊழல் தொடா்புடைய சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால், மே 29-ஆம் தேதி பிறப்பித்த ஒரு உத்தரவு மூலம் ரெட்டிக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ரெட்டிக்கு சமீபத்தில் தில்லி உயா்நீதிமன்றம் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கியது. அமலாக்கத் துறையினரின் தகவலின்படி, ரெட்டி ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட அரபிந்தோ பாா்மா நிறுவனத்தின் தலைவா் ஆவாா். மதுபான வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளாா். தில்லி கலால் ஊழல் தொடா்புடைய வழக்கில் நீதிமன்றத்தில் முன்னா் அமலாக்கத் துறை தெரிவிக்கையில், ‘இந்த கலால் உருவாக்கம், அமலாக்கம் தொடா்புடைய மோசடியில் ஈடுபட்டுள்ள பல்வேறு வணிக உரிமையாளா்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் ரெட்டி தீவிரமாக திட்டமிட்டு சதி செய்திருந்தாா். தில்லி கலால் கொள்கையில் இருந்து தேவையற்ற ஆதாயம் பெற நியாயமற்ற சந்தை நடைமுறைகளில் அவா் ஈடுபட்டாா் என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

கலால் கொள்கையின் நோக்கங்களை தெளிவாக மீறும் வகையில், குழு மூலம் ஒரு பெரிய சந்தைப் பங்கைக் கட்டுப்படுத்துவதற்கு ரெட்டி வழிவகுத்ததாகவும் அமலாக்கத் துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ரெட்டி முன்னா் கூறுகையில், முன்கூட்டியே எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையெழுத்திட சாட்சிகள் மீது அமலாக்ககத் துறை அழுத்தம் தருவதாக குற்றம்சாட்டியிருந்தாா். விசாரணையின் போது, அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில்லாதவை என்று அவா் கூறியிருந்தாா். சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வந்த ஊழல் வழக்கில் தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் தினேஷ் அரோரா முன்னா் அப்ரூவராக மாறினாா்.

2021-22-இல் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தின்போது கலால் துறையை வகித்த முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மூலம் விசாரிக்கப்படும் வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். அவா் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா். தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் பணமோசடி செய்ததாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT