இந்தியா

2024 மக்களவைத் தேர்தலில் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன: அமெரிக்காவில் ராகுல் பேச்சு

DIN


வாஷிங்டன்: 2024 மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன, பாஜகவை வீழ்த்துவதற்கு இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக "நிறைய நல்லவிதமான வேலைகள் நடைபெற்று வருகின்றன" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

6 நாள் சுற்றுப் பயணமாக கடந்த மே 30 ஆம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு சென்றார் ராகுல் காந்தி. அதைத் தொடர்ந்து, கலிபோர்னியாவின் சான்டா கிளாராவில் இந்திய புலம் பெயர்ந்தோர் கூட்டத்தில் உரையாற்றினார்.

ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க் செல்லும் ராகுல், தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார். 

அமெரிக்காவில் மூன்று நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பேசியதுடன், 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் மக்களை ‘ஆச்சரியப்படுத்தும்’ என்று கணித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் கிளப்பில் வியாழக்கிழமை நடந்த உரையாடலின் போது, செய்தியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ராகுல், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பலம் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது, இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் எதிர்க்கட்சிகள் தற்போது ஓரணியில் திரண்டு வருகின்றன. நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக நிறைய நல்ல விதமான வேலைகள் நடைபெற்று வருகின்றன".

முக்கியமாக, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள, பெரும்பாலும் ஒத்த எண்ணம் கொண்ட பல எதிர்க்கட்சிகள் இப்போது கைகோர்த்து வருகின்றன. தற்போதைய பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் “ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளின்” மாநாடு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமை தாங்குகிறார். 

"இது ஒரு சிக்கலான விவாதம், ஏனென்றால் நாமும் (மற்ற) எதிர்க்கட்சிகளுடன் (கட்சிகளுடன்) போட்டியிடும் இடங்கள் தொடர்பான சில சிக்கல்கள் இருப்பதால், அது சற்றே சிக்கலான விவாதமாக இருக்கும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய சில கொடுக்கல், வாங்கல் தேவைப்படும். ஆனால் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன்," என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்பைவிட இன்னமும் வலிமையாக இணைந்து நிற்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் வலிமையான கூட்டணி அமையும். அதற்கு இன்னமும் வலிமையான கூட்டணி தேவை. மேலும் தெளிவான செயல் திட்டம் மிகவும் அவசியம்.

பாஜகவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களுக்கு பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

1947ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய வரலாற்றில், அவதூறு வழக்கில் அதிக தண்டனை பெற்ற முதல் நபர் நான் மட்டும் தான். அதுவும் முதல் குற்றத்துக்கு இதுபோன்று அதிகபட்ச தண்டனை யாருக்கும் வழங்கப்பட்டதில்லை. 

நாடாளுமன்றத்தில் அதானி குறித்து நான் பேசிய பிறகே என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகிக்கித்துக் கொள்ள முடியும். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெற்று பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றியதைச் சுட்டிக்காட்டிய ராகுல், தேச ஒற்றுமை நடைப்பயணத்தில் கிடைத்த அனுபங்கள், கற்ற பாடங்களின் அடிப்படையில் தான் கர்நாடக பேரவைத் தேர்தலை எதிர்கொண்டோம். 

தேச ஒற்றுமை நடைப்பயணத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை லட்சக்கணக்கான மக்களை சந்தித்தேன். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் மக்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, "அடுத்த மூன்று அல்லது நான்கு மாநிலத் தேர்தல்கள் பாஜக வீழ்ச்சிக்கான முன்னோட்டமாக இருக்கும்" என்றும், "அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நன்றாகச் செயல்படும் என்று தான் நம்புவதாகவும், 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் மக்களை ‘ஆச்சரியப்படுத்தும்’ என்று கூறினார். 

உக்ரைன்-ரஷியா விவகாரத்தைப் பொறுத்தவரை பாஜகவின் செயல்பாடுகளைப் போன்றுதான் காங்கிரஸ் செயல்பாடும் இருந்திருக்கும். ரஷியாவுடன் இந்தியா நீண்ட கால உறவைக் கொண்டுள்ளது. அதனை மறுக்க முசியாது.

சீனா விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது. நமது நிலப்பரப்பில் 1500 சதுர கிலோமீட்டரை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்த உண்மையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

மத்தியில் ஆளும் பாஜக. சமூகத்தை பிளவுபடுத்தி ஆள நினைக்கிறது. நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இது தேசத்திற்கு மிகப்பெரிய சேதத்தை எற்படுத்துகிறது.

இந்தியாவில் பத்திரிகை மற்றும் மத சுதந்திரம், சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த ராகுல் காந்தி, இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் பலவீனமடைவது குறித்து, ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் மிக மிக முக்கியமானது என்றார்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்திக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT