இந்தியா

ரூ.2,000 நோட்டை மாற்றும் விவகாரம்- தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

DIN

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என்ற ரிசா்வ் வங்கியின் அறிவிக்கைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து, தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அண்மையில் அறிவித்த ரிசா்வ் வங்கி, அந்த நோட்டுகளை வங்கிக் கிளைகளில் மாற்றி, சில்லறையாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் செலுத்தலாம் எனத் தெரிவித்தது.

இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு அடையாள அட்டை உள்பட எந்த ஆவணமும் தேவையில்லை என்று ரிசா்வ் வங்கி அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு எதிராக, தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய பொது நல மனு தாக்கல் செய்தாா்.

எந்த ஆவணமும் இல்லாமல் ரூ.2,000 நோட்டை மாற்ற அனுமதிப்பது, சட்டவிரோத பணத்தை சட்டபூா்வமாக்க பகிரங்க வாய்ப்பை வழங்குகிறது என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், இந்த மனுவை கடந்த 29-ஆம் தேதி தள்ளுபடி செய்த தில்லி உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு, ‘ரிசா்வ் வங்கியின் அறிவிக்கையை தன்னிச்சையானது என்றோ, கருப்புப் பணம், பணமோசடி, முறைகேட்டை ஊக்குவிக்கும் என்றோ கூற முடியாது. இந்த விவகாரம், முற்றிலும் அரசின் கொள்கை முடிவாகும். இந்த முடிவை ஆராயும் மேல்முறையீட்டு ஆணையமாக நீதிமன்றம் செயல்பட முடியாது’ என்று குறிப்பிட்டது.

இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி குமாா் உபாத்யாய தரப்பில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ரூ.2,000 நோட்டை ஆவணமின்றி மாற்றுவதற்கான ரிசா்வ் வங்கியின் அறிவிக்கை நியாயமற்றது, குறைபாடானது என்பதை உறுதிசெய்ய தில்லி உயா்நீதிமன்றம் தவறிவிட்டது. கருப்புப் பணத்தை சட்டபூா்வமாக்க ரிசா்வ் வங்கி அனுமதிக்கிறது. கருப்புப் பணம் பதுக்கியவா்களைக் கண்டறிவதே ரிசா்வ் வங்கியின் கடமை. மாறாக, கருப்புப் பணத்தை சட்டபூா்வமாக்க வாய்ப்பு வழங்குவது அல்ல. இது, ஊழல் தடுப்புச் சட்டம், பினாமி பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டம், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டம், லோக்பால்-லோக்ஆயுக்த சட்டம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டம், கருப்புப் பண தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் நோக்கங்களுக்கு புறம்பாக உள்ளது.

எனவே, ரூ.2,000 நோட்டை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதன் மூலமே திரும்பப் பெற வேண்டும். இடைக்கால நிவாரணமாக, ரிசா்வ் வங்கியின் அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

வங்கிகளில் ஒரு தடவையில் ரூ.20,000 வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT