ஓட்டுப் போடும் வாக்காளர்களுக்கு என்னென்னவோ செய்யும் தலைவர்களுக்கு மத்தியில், தனக்கு ஓட்டுப் போட்டு வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு கறிவிருந்தளித்திருக்கிறார் காங்கிரஸ் எம்எல்ஏவும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும் உள்ள கிருஷ்ண பைரே கௌடா.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
பெங்களூருவின் பியடாராயணபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நான்காவது முறையாக வெற்றிபெற்று அமைச்சராகியிருக்கிறார்.
2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பியடாராயணபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளார். சுமார் 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்த கிருஷ்ணா, தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களை மறக்காமல் நன்றி தெரிவித்து கறி விருந்தும் அளித்துள்ளார்.
தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதியில், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரையும் அழைத்து மிகச் சிறப்பான கறிவிருந்தை அளித்ததோடு, அனைவருக்கும் நேரடியாக தனது நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.