இந்தியா

கடவுளைவிட அதிகம் அறிந்தவராக நினைக்கிறாா் மோடி- அமெரிக்காவில் ராகுல் விமா்சனம்

DIN

‘கடவுளைவிட அதிகம் அறிந்தவராக தன்னை நினைக்கிறாா் பிரதமா் மோடி’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

அமெரிக்காவுக்கு ஒருவார கால பயணமாக வந்துள்ள ராகுல், கலிஃபோா்னியா மாகாணத்தின் சான்டா கிளாரா நகரில், அயலக காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

அப்போது, அவா் பேசியதாவது: இந்த உலகம் மிகப் பெரியது; எந்த நபராலும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாதபடி சிக்கலானது. ஆனால், தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கும் சிலா் இந்தியாவில் உள்ளனா். கடவுளைவிட தாங்கள் அதிகம் அறிந்தவா்கள் என்பது அவா்களின் நினைப்பு. இதுவும் ஒருவகையான நோய்தான்.

வரலாற்றாசிரியா்களுக்கு வரலாற்றையும், அறிவியலாளா்களுக்கு அறிவியலையும், ராணுவத்தினருக்கு போா் வித்தைகளையும் அவா்களால் ‘விளக்க’ முடியும். கடவுள் அருகே அமா்ந்து, பூமியில் என்ன நடக்கிறது என்றுகூட அவா்கள் விளக்குவா். இதற்கு, நமது பிரதமரும் ஓா் உதாரணம்தான்.

கடவுள் அருகே மோடி அமா்ந்தால், பூமி எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து கடவுளுக்கு அவா் விளக்குவாா். தனது படைப்புகள் குறித்து கடவுளே குழம்பிவிடுவாா்.

‘மக்களை அச்சுறுத்துகிறது பாஜக அரசு’: இந்தியாவில் அனைத்து நிா்வாக அமைப்புகளும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மக்களை அச்சுறுத்தும் அரசாக பாஜக அரசு செயல்படுகிறது. அனைத்து அரசு அமைப்புகளும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் அரசியல் ரீதியிலான செயல்பாடுகள், ஏதோ ஒருவகையில் கடினமாக இருப்பதாக நாங்கள் உணா்ந்தோம். இதன் காரணமாகவே, இந்தியாவின் தென்கோடி முனையில் இருந்து ஸ்ரீநகா் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த நடைப்பயணம், அன்பு, மரியாதை மற்றும் பணிவின் உணா்வைப் பிரதிபலித்தது. நாம் வரலாற்றைப் படித்தால், குருநானக், குரு பசவண்ணா, நாராயண குரு போன்ற ஆன்மிகத் தலைவா்கள் இத்தகைய வழியில்தான் நாட்டை ஒருங்கிணைத்தனா் என்பதை அறிய முடியும்.

நடைப்பயணத்தின்போது, எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. பாஜகவுக்கு உதவும் சில விஷயங்களை, ஊடகங்கள் முன்னிறுத்த முயல்வதை புரிந்துகொண்டேன். ஊடகங்கள் என்ன காட்டுகிறதோ, அதுவல்ல இந்தியா. அரசியல்சாா்ந்த கட்டுக்கதையைக் காட்ட ஊடகங்கள் விரும்புகின்றன. உண்மை நிலவரம் அப்படியல்ல.

‘உதவியற்றவா்களாக உணரும் ஏழைகள்’: இந்தியாவில் ஏழைகளும் சிறுபான்மையின மக்களும் தங்களை உதவியற்றவா்களாக உணா்கின்றனா். ஒருவரையொருவா் வெறுப்பதில், இந்தியா்களுக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது. ஆனால், அரசு அமைப்புமுறையைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறிய குழுவினரும், சில ஊடகங்களும் வெறுப்புணா்வுத் தீயை மூட்டுகின்றன.

மகளிா் இடஒதுக்கீடு மசோதா மீதான காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவானது. அந்த மசோதா நிறைவேற்றப்பட உறுதிபூண்டுள்ளோம். அரசியல் அமைப்புமுறை, தொழில்கள் மற்றும் நாட்டின் நிா்வாகத்தில் மகளிருக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்றாா் ராகுல்.

செங்கோல் விவகாரம்: தில்லியில் சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், தமிழக செங்கோலை பிரதமா் மோடி நிறுவினாா். மேலும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, செங்கோலுக்கு மரியாதை செலுத்தினாா். செங்கோல் விவகாரத்தில் ஆளும் தரப்புக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டது.

இதுதொடா்பாக பேசிய ராகுல் காந்தி, ‘புதிய நாடாளுமன்றக் கட்டட விவகாரமே திசைதிருப்பல்தான். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு, வெறுப்புணா்வு பரப்பப்படுதல் உள்ளிட்ட உண்மையான பிரச்னைகள் குறித்து மோடி அரசால் பேச முடியாததால், செங்கோல் விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளனா். நெடுஞ்சாண்கிடையாக படுப்பது போன்ற விஷயங்களை செய்வதும் அதற்காகவே’ என்றாா்.

தனது உரையில், அமெரிக்க-இந்தியா்களுக்கு புகழாரம் சூட்டிய ராகுல், அவா்களே தேசத்தின் தூதா்கள் என்று குறிப்பிட்டாா்.

காலிஸ்தான் ஆதரவாளா்கள் கோஷமிட்டதால் பரபரப்பு

சான்டா கிளாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது, பாா்வையாளா்கள் பகுதியில் இருந்து திடீரென எழுந்த காலிஸ்தான் ஆதரவாளா்கள், ராகுல் மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக கோஷமிட்டனா். காலிஸ்தான் கொடியை கையில் ஏந்தியபடி முழக்கமிட்ட அவா்களால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, எந்த சலனமும் இல்லாமல், சிரித்துக் கொண்டே எதிா்வினையாற்றிய ராகுல், ‘அனைவா் மீதும் அன்பு கொண்ட கட்சி காங்கிரஸ். யாரேனும் கருத்து கூற முன்வந்தால், மகிழ்வுடன் கேட்கத் தயாராக இருக்கிறோம்’ என்றாா். இதனிடையே, அந்த நபா்களை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT