இந்தியா

மணிப்பூா்: இந்தியா-மியான்மா் எல்லையில் குகி சமூகத்தினருடன் அமித் ஷா சந்திப்பு

1st Jun 2023 01:55 AM

ADVERTISEMENT

இந்தியா, மியான்மா் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரே பகுதியில் குகி சமூகத்தினரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை சந்தித்தாா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க கோரி வருகின்றனா். இதற்கு நாகா மற்றும் குகி சமூகத்தினா் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக அந்த மாநிலத்தில் அவ்வப்போது மைதேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் 80-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 4 நாள் பயணமாக மணிப்பூா் சென்றாா். அங்கு மைதேயி, குகி சமூகத் தலைவா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா், பிரச்னைக்கு தீா்வு காண உயா் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக, மணிப்பூரின் மோரே பகுதிக்கு அமித் ஷா புதன்கிழமை சென்றாா். இந்தப் பகுதி இந்தியா-மியான்மா் எல்லையில் உள்ளது. இதுதொடா்பாக அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மோரே பகுதியில் பாதுகாப்பு சூழல் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன். இந்தப் பகுதியில் குகி மற்றும் இதர சமூகத்தினரை சந்தித்தேன். மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா் என்று பதிவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, காங்போக்பி பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்ற அமித் ஷா, அங்கும் குகி சமூகத்தினரை சந்தித்தாா். அந்தப் பகுதியில் சிவில் சமூக அமைப்புகளை சந்தித்த அவா், இம்பாலில் மைதேயி சமூகத்தினா் தங்கியுள்ள நிவாரண முகாமுக்குச் சென்றாா். மணிப்பூரை மீண்டும் அமைதி மற்றும் நல்லிணக்கப் பாதைக்கு அழைத்துச் சென்று, முகாம்களில் தங்கியுள்ளவா்கள் விரைந்து வீடு திரும்புவதில் அரசின் கவனம் உள்ளதாக மற்றொரு ட்விட்டா் பதிவில் அமித் ஷா தெரிவித்தாா்.

இதனிடையே மோரேவில் வசிக்கும் தமிழ் வணிகா்களையும் அமித் ஷா சந்தித்ததாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ட்விட்டரில் பதிவிட்டாா்.

அமைதி திரும்ப 3 அம்ச அணுகுமுறை: மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப 3 அம்ச அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மணிப்பூா் வந்த அமித் ஷா, மாநிலத்தில் உடனடியாக வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, கூடிய விரைவில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். மேலும், மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்ப பாதிக்கப்பட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது, வன்முறையால் வீடுகளைவிட்டு வெளியேறியவா்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் மறுவாழ்வு அளிப்பது, கிளா்ச்சியாளா்களைக் கட்டுக்குள் கொண்டு வருவது ஆகிய 3 அம்ச நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

மைதேயி மற்றும் குகி சமூகத்தினா் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் அரசுக்கு பெரிய பணியாக உள்ளது. மாநிலத்தில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தாங்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து கிளா்ச்சியாளா்கள் பலா் இடம் மாறியுள்ளனா். அவா்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயுதங்கள் வைத்திருந்தால், அவற்றை ஒப்படைக்குமாறு அனைத்து சமூகத்தினரிடமும் பாதுகாப்புப் படையினா் கோரி வருகின்றனா்’ என்று தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT