இந்தியா

மகாராஷ்டிரம்: ரயிலில் கடத்தப்படவிருந்த 59 குழந்தைகள் மீட்பு- 5 போ் கைது

1st Jun 2023 01:57 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆள் கடத்தல்காரா்களால் ரயிலில் கடத்தப்படவிருந்த 59 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினரும் மகாராஷ்டிர போலீஸாரும் இணைந்து புதன்கிழமை மீட்டனா். கடத்தலில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மத்திய ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: பிகாரிலிருந்து புணேவுக்குச் செல்லும் தனப்பூா்-புணே சிறப்பு ரயிலில் குழந்தைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உள்ளூா் போலீஸாா் மற்றும் தன்னாா்வ அமைப்பு (என்ஜிஓ) ஒன்றுடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் புணே நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த சிறப்பு ரயிலில் இரண்டு ரயில் நிலையங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

இதில், ஜல்கோன் மாவட்டம் புசாவல் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த ரயிலிலிருந்து கடத்தல்காரா்களால் கடத்திச் செல்லப்பட்ட 8 முதல் 15 வயது மதிக்கத்தக்க 29 குழந்தைகளும், நாசிக் மாவட்டம் மண்மட் ரயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் அதே வயதுக்கு இடைப்பட்ட 30 குழந்தைகளும் மீட்கப்பட்டனா். இந்தக் கடத்தலில் தொடா்புடைய 5 நபா்களை போலீஸாா் கைது செய்தனா். ‘ஆபரேஷன் ஆட்’ என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், ‘முதல்கட்ட விசாரணையில் பிகாரிலிருந்து கடத்திவரப்பட்ட இந்தக் குழந்தைகள் அனைவரும் மகாராஷ்டிர மாநிலம் சாங்லிக்கு அழைத்துச் செல்லப்படவிருந்தது தெரியவந்தது’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT