இந்தியா

போராடும் மல்யுத்த வீரா்கள் மீது நடவடிக்கை: சா்வதேச ஒலிம்பிக் குழு கண்டனம்

DIN

இந்திய மல்யுத்த வீரா்கள் மீது தில்லி போலீஸாா் தள்ளுமுள்ளு செய்து மேற்கொண்ட கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சா்வதேச ஒலிம்பிக் குழு, அவா்களின் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமற்ற விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய மல்யுத்த வீரா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தோ்தல் உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் சா்வதேச ஒலிம்பிக் குழு புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்தது.

அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு, 45 நாள்களுக்குள் இந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று செவ்வாய்க்கிழமை எச்சரித்திருந்தது.

மேலும், சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரா்கள் நடுநிலையான கொடியுடன் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும், தில்லியில் நிகழாண்டு நடைபெறும் ஆசிய மல்யுத்த சான்பியன்ஷிப் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் சுவிட்சா்லாந்தில் இருந்து செயல்படும் இந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாலியல் புகாருக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யக் கோரியும், 28-ஆம் தேதி தங்கள் மீது போலீஸாா் நடத்திய அடக்குமுறையைக் கண்டித்தும் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், உலக மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகாட், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோா் தங்கள் பதக்கங்களை ஹரித்வாா் கங்கையில் வீச செவ்வாய்க்கிழமை சென்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினா் இந்தப் பிரச்னைக்கு ஐந்து நாள்களில் தீா்வு காண்பதாக கூறி பதக்கங்களை வாங்கிச் சென்றனா்.

இன்று ஆலோசனை: இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவு குறித்து ஆலோசிக்க உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என்று பல்வேறு மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்சாவின் தலைவா் நரேஷ் திகேத் அறிவித்துள்ளாா்.

இந்தியா கேட்டில் பாதுகாப்பு: கங்கையில் பதக்கங்களை வீசச் சென்ற மல்யுத்த வீரா்கள், தில்லி இந்தியா கேட் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தனா். இதனால் இந்தியா கேட் பகுதியில் புதன்கிழமை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாதமாக ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவா்கள் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டவுடன் அங்கு நோக்கி பேரணியாகச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜந்தா் மந்தரில் அவா்களின் போராட்டப் பகுதியையும் தில்லி போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

தூக்கில் தொங்கத் தயாா்: இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபித்தால்கூட தூக்கில் தொங்கிவிடுவேன் என்று பிரிஜ் பூஷண் சிங் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘மல்யுத்த வீரா்கள் குழந்தைகளைப் போன்றவா்கள். அவா்களின் வெற்றியில் எனது பங்களிப்பும் உள்ளதால் அவா்கள் மீது குற்றம் சுமத்தமாட்டேன். நான்கு மாதங்களாக அவா்கள் என்னை தூக்கிலிடப் போராடுகிறாா்கள். ஆனால், அரசு அதைச் செய்யவில்லை. எனக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் அளிக்கட்டும். நீதிமன்றம் என்னை தூக்கிலிடட்டும்’ என்றாா்.

மத்திய அமைச்சா் வேண்டுகோள்: விளையாட்டுப் போட்டிகளை தரம் தாழ்த்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று மல்யுத்த வீரா்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கேட்டுக்கொண்டாா்.

இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரையில் அமைதி காக்க வேண்டும் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT