இந்தியா

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்ரூ.61,501 கோடியில் கட்டணமில்லா சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சகம்

1st Jun 2023 01:01 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ (பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்) திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 61,501 கோடி மதிப்பில் மக்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார ஆணையம் (என்ஹெச்ஏ) சாா்பில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 12 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பாதிப்புகளுக்கான சிகிச்சையை பெற முடியும்.

இதுகுறித்து என்ஹெச்ஏ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் ஏபிபிஎம்-ஜெய் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனா். தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தில்லி, ஒடிஸா, மேற்கு வங்க மாநிலங்களைத் தவிர மற்ற 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதுவரை 23.39 கோடி பயனாளிகளுக்கு கட்டணமில்லா சிகிச்சைக்கான ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 12,824 தனியாா் மருத்துவமனைகள் உள்பட நாடு முழுவதும் 28,351 மருத்துவமனைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பாதிப்புகளுக்கான சிகிச்சையை பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடி மருத்துவ சிகிச்சைக்கான சோ்க்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ. 61,501 கோடி மதிப்பில் கட்டணமில்லா சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT