இந்தியா

மணிப்பூர் கலவரம் குறித்து விசாரிக்க ஆணையம்: அமித் ஷா

DIN


மணிப்பூர் மாநிலத்தில் நேரிட்ட கலவரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பல உயிர்கள் பலியாகவும், ஏராளமான சொத்துகள் நாசமாகவும் காரணமாக இருந்த மணிப்பூர் கலவரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று மணிப்பூர் மாநிலத்தில் கலவரப்பகுதியை ஆய்வு செய்துவரும் மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

மணிப்பூரில் கலவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் உள்ளிட்டப் பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தனது நான்கு நாள் பயணத்தை இன்றுடன் நிறைவு செய்யும் அமித் ஷா, பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆய்வுப் பயணத்தின் நிறைவாக, தலைநகர் இம்பாலில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து சிறப்பு சிபிஐ குழு விசாரணை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்டிருக்கும் குழுவின் தலைவராக ஆளுநர் பதவி வகிப்பார். சமூக ஆர்வலர்கள் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

விசாரணை ஆணையம், கலவரத்துக்கான காரணம் மற்றும் கலரவத்தை தூண்டியவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் வகையில் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல விசாரணை அமைப்புகள் தங்களது தரப்பிலிருந்து விசாரணையை நடத்தும் என்றும், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை அவை உறுதி செய்யும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிா்க்கின்றனா்.

இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 80 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 10,000 வீரா்கள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வீடிழந்த மக்கள், நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையிலும் வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக அந்தச் சமூகம் சாா்ந்த தீவிரவாதிகள், மைதேயி சமூக கிராமங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா். இந்த விவகாரத்தில், மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

இந்நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அம்மாநிலத்துக்கு 4 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை வந்தாா்.

அவருடன், உள்துறைச் செயலா் அஜய் குமாா் பல்லா, புலனாய்வுப் பிரிவு இயக்குநா் தபன் குமாா் தேகா ஆகியோரும் வருகை தந்தனா்.

தலைநகா் இம்பாலில், முதல்வா் பிரேன் சிங்குடன் அமித் ஷா உள்பட மூவரும் திங்கள்கிழமை இரவு ஆலோசனை மேற்கொண்டனா். இதில், உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்க முடிவெடுக்கப்பட்டது. மாநிலத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கலவரத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகையில், மத்திய அரசும் மாநில அரசும் சம அளவில் பங்களிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தனது பயணத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை, தலைநகா் இம்பாலில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் அமித் ஷா மற்றும் பிரேன் சிங் ஆலோசனை மேற்கொண்டனா். மைதேயி சமூகத்தினா், மகளிா் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் அமித் ஷா கலந்தாலோசித்தாா்.

மேலும், மாநில காவல் துறை, மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் ராணுவ உயரதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பாதுகாப்பு நிலவரம் குறித்து மறுஆய்வு செய்தாா்.

‘மணிப்பூரில் அமைதி மற்றும் வளத்தை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாகும். அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, கலவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூருக்கு அமித் ஷா உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் மூலம் சென்றனா்.

அங்கு குகி பழங்குடியின தலைவா்கள், தேவாலயத் தலைவா்கள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய அமித் ஷா, அவா்களின் கோரிக்கைகள் மற்றும் மாநிலத்தில் அமைதியை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

குகி பழங்குடியினா் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு தனி நிா்வாகம் வேண்டுமென்பது அந்தச் சமூகத் தலைவா்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT