இந்தியா

தானிய கிடங்குகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

கூட்டுறவுத் துறையில் 7 கோடி டன் உணவு தானியத்தை சேமிக்கும் வகையில் கிடங்குகளை அமைக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
 இதுதொடர்பாக தில்லியில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 வளர்ந்த நாடுகளில் தானிய உற்பத்தியைவிட சேமிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், இந்தியாவின் தானிய உற்பத்தித் திறன் 31 கோடி டன்களாக இருந்தாலும் சேமிப்புத் திறன் வெறும் 47 சதவீதம்தான்.
 இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் 7 கோடி டன் தானிய சேமிப்புத் திறனை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்புத் திட்டமாகும்.
 இந்தத் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் மூலம் தற்போது சுமார் 14.5 கோடி டன்களாக உள்ள நாட்டின் மொத்த தானிய சேமிப்புத் திறன், 21.5 கோடி டன்களாக அதிகரிக்கும்.
 சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவினத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படும். மத்திய வேளாண்மை அமைச்சகம், உணவு மற்றும் உணவு பதப்படுத்துதல், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகங்களிடம் உள்ள நிதி திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும்.
 இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு வட்டாரத்திலும் 2,000 டன் சேமிப்புத் திறன் கொண்ட கிடங்கு அமைக்கப்படும். நாட்டில் ஒரு லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 63,000 சங்கங்கள் இயங்கி வருகின்றன. உணவு தானிய சேமிப்பில், அந்தச் சங்கங்கள் பலவிதமாகச் செயல்பட முடியும் என்பதால், 2,000 டன் சேமிப்புத் திறன் கிடங்குகள் அமைக்கப்படுவது கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும்.
 இந்தத் திட்டம் உணவு தானியம் வீணாவதைக் குறைத்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும். விவசாயிகள் தானியங்களை அவசர அவசரமாக விற்பதைத் தடுக்கும். மேலும், கொள்முதல் நிலையங்களுக்கு உணவு தானியங்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு, கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு தானியங்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றையும் குறைக்கும். அத்துடன் இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும்.
 சிஐடிஐஐஎஸ் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல்: புத்தாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்திருப்பதற்கான நகர முதலீடுகளின் மேம்பட்ட வடிவத்துக்கு (சிஐடிஐஐஎஸ் 2.0) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேலாண்மையை மையமாக கொண்டு, சுழற் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு உதவ முற்படுகிறது.
 இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பிரெஞ்சு வளர்ச்சி முகமை மற்றும் ஜெர்மனியின் கேஎஃப்டபிள்யூ வங்கியிடம் இருந்து ரூ.1,760 கோடி கடன், ஐரோப்பிய யூனியனிடம் இருந்து தொழில்நுட்ப உதவித்தொகையாக ரூ.106 கோடி பெறப்படும் என்றார்
 அனுராக் தாக்குர்.
 "கூட்டுறவு கடன் சங்கங்கள் வலுப்பெறும்'
 உணவு தானிய சேமிப்புத் திறனை அதிகரிக்கும் திட்டம் கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்த வசதியாக, மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐஎம்சி) அமைக்கவும், அந்தக் குழுவுக்கு அதிகாரமளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்படும் அந்தக் குழுவில், மத்திய வேளாண்மை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்கள் இடம்பெறுவர்.
 கூட்டுறவுத் துறையில் தானிய சேமிப்புத் திட்டம் பன்முகத்தன்மை கொண்டது. நாட்டில் உள்ள வேளாண் விளைபொருள்கள் சேமிப்பு உள்கட்டமைப்புப் பற்றாக்குறையை இந்தத் திட்டம் எதிர்கொள்வதுடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடவும் அனுமதிக்கிறது. மாநில முகமைகள், இந்திய உணவுக் கழகம் ஆகியவற்றின் கொள்முதல் நிலையங்களாக, நியாயவிலைக் கடைகளாக அந்த சங்கங்கள் செயல்பட முடியும். அரசின் முழுமையான அணுகுமுறை மூலம், இந்தத் திட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்தும். இதனால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT