இந்தியா

3 மாநிலங்களில் பி.எஃப்.ஐ.யுடன் தொடர்புடைய 25 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

1st Jun 2023 03:33 AM

ADVERTISEMENT

நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' (பிஎஃப்ஐ) அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக கர்நாடகம், பிகார், கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
 பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 கடந்த ஆண்டு பிகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பிஎஃப்ஐ அமைப்பு வகுத்திருந்த சதி தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. அதேபோல், பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள வளைகுடா நாடுகளில் இருந்து நிதி உதவி பெறப்படுவது தொடர்பாகவும் விசாரித்து வருகிறது.
 இது தொடர்பாக, கர்நாடகம், கேரளம் ஆகிய 2 மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.
 இந்நிலையில், கர்நாடகம், பிகார், கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்களின் இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது. பிகாரின் கத்திஹார், கர்நாடகத்தின் தட்சிண கன்னடா, ஷிமோகா, கேரளத்தின் காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது.
 பிஎஃப்ஐ அமைப்பின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசி, ஹார்ட் டிஸ்க், பென்-டிரைவ் உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்கள், பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. சோதனையின்போது ரூ.17.50 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
 கர்நாடகத்தின் தென்கன்னட மாவட்டம், மங்களூரின் பன்ட்வால், உப்பினங்கடி, வேனூர், பெல்தங்கடி உள்ளிட்ட பகுதிகளில் பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்புடைய 16 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பிகாரின் கத்திஹார் மாவட்டத்தில் மாபூப் ஆலம் என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது ஆலமின் உறவினர்களிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 85 இடங்களுக்கும் மேலாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT