இந்தியா

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல்முயற்சியை முறியடித்த ராணுவம்: 3 பயங்கரவாதிகள் கைது

1st Jun 2023 12:58 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை புதன்கிழமை முறியடித்த இந்திய ராணுவத்தினா், 3 பயங்கரவாதிகளைக் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் தேவேந்தா் ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ராணுவமும் ஜம்மு-காஷ்மீா் போலீஸாரும் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பலத்த மழை மற்றும் மோசமான தட்பவெப்ப நிலையைப் பயன்படுத்தி புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் 3 முதல் 4 பயங்கரவாதிகள் எல்லைப் பகுதி வேலியைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனா்.

ADVERTISEMENT

இந்த ஊடுருவலை பாதுகாப்புப் படையினா் தடுக்க முயன்றனா். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். சண்டையின் முடிவில், 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவரும், ஒரு பயங்கரவாதியும் காயமடைந்தனா். காயமடைந்த பயங்கரவாதி போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் கா்மாரா பகுதியைச் சோ்ந்த முகமது ஃபரூக் (26), முகமது ரியாஸ் (23), முகமது சுபைா் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவா்கள் எல்லைக்கு அப்பாலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களைப் பெற்று, இந்தியாவுக்குள் கடத்த முயன்றுள்ளனா்.

ஒரு ஏகே ரக துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள், 6 கையெறி குண்டுகள், 10 கிலோ எடையுள்ள குக்கா் வெடிகுண்டு, ரூ. 100 கோடி மதிப்பிலான 20 பாக்கெட் ஹெராயின் போதைப் பொருள் ஆகியவை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. நிபுணா்கள் மூலமாக குக்கா் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT