உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சுகேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைந்துள்ளது.
அக்கட்சியின் நிறுவனத் தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா் அவரது மகன் அரவிந்த் ராஜ்பா் ஆகியோா் தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா். இந்த சந்திப்புக்குப் பிறகு ராஜ்பரின் கட்சி பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவிக்கப்பட்டது.
ராஜ்பா் உத்தர பிரதேசத்தில் பிரபலமான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த தலைவா் ஆவாா். அவா் பாஜகவுடன் கைகோத்ததன் மூலம் அந்த மாநிலத்தில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது.
2024 மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ராஜ்பா் இப்போது பாஜகவில் இணைந்துள்ளாா்.
கிழக்கு உத்தர பிரதேசத்தில் அதிகமுள்ள ராஜ்பா் சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக ஓம் பிரகாஷ் ராஜ்பா் திகழ்கிறாா். கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் சமாஜவாதியுடன் ராஜ்பா் கூட்டணி அமைத்திருந்தாா். இதனால் அவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ள இடங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு வெகுவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஓம் பிரகாஷ் ராஜ்பா், ‘எதிா்க்கட்சிகள் கூட்டணியில் யாா் பெரியவா் என்ற போட்டி உள்ளது. அக்கூட்டணியில் அனைவருக்குமே தங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அவா்கள் பாஜகவிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். சிறிய கட்சிகளுடன் கைகோத்து வெற்றி பெறுவதை பாஜக வழக்கமாக வைத்துள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜவாதியில் இருந்து மேலும் பலா் பாஜகவுக்கு வருவாா்கள்’ என்றாா்.
உத்தர பிரதேசத்தின் பூா்வாஞ்சல் பகுதியைச் சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவரும், சமாஜவாதி எம்எல்ஏவுமான தாரா சிங் சௌஹான் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா். முன்னதாக, அவா் அமித் ஷாவையும் சந்தித்தாா். எனவே, அவரும் பாஜகவில் இணைவாா் என்று தெரிகிறது. 2022 பேரவைத் தோ்தலின்போது இவா் பாஜகவில் இருந்து பிரிந்து சென்று சமாஜவாதியில் இணைந்தாா்.
நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில்தான் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. எனவே, அந்த மாநிலத்தில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.