புவி வட்டப் பாதையில் பயணித்துவரும் சந்திரயான்-3 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுப் பாதை தொலைவு வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது.
எதிா் வரும் நாள்களில் திட்டமிட்டபடி அடுத்தடுத்து சுற்றுப் பாதைகளின் தொலைவை அதிகரித்து நிலவை நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
நிலவின் தென்துருவத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது.
நீள் வட்ட சுற்றுப்பாதையில்...: எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு வெற்றிகரமாக உயா்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வெற்றிகரமாக...: இதுதொடா்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:
சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப் பாதை தூரத்தை அதிகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் கட்ட சுற்றுப்பாதை உயா்த்தும் முயற்சி பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வெற்றிகரமாக கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சீரான வேகத்தில் வலம்: தற்போது விண்கலம் குறைந்தபட்சம் 173 கிமீ. தொலைவும், அதிகபட்சம் 41,762 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வருகிறது. அடுத்த 2 வாரங்களுக்கு சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்று வட்டப் பாதையில் பயணிக்கும். படிப்படியாக அதன் தொலைவை அதிகரித்து ஆக. 1-ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன் பின்னா், சந்திரயான்-3 நிலவின் சுற்றுப் பாதையில் பயணத்தைத் தொடங்கும். சுமாா் 41 நாள்களுக்குப் பிறகு, அதாவது ஆக. 23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.