இந்தியா

ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்கள் அமைக்க ஒப்புதல்

12th Jul 2023 12:25 AM

ADVERTISEMENT

ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்கள் அமைக்க ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் மாநில நிதியமைச்சா்கள், மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்களை அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக, மாநிலத் தலைநகரங்களில் அந்தத் தீா்ப்பாயங்கள் அமைக்கப்படும். பின்னா், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ADVERTISEMENT

எம்யுவி வகை காா்களுக்கு 22 சதவீத ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், ‘செடான்’ வகை காா்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி தகவல்-தொழில்நுட்ப அமைப்பில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி விலக்கு: தனிநபரால் இறக்குமதி செய்யப்படும் ‘டைனடக்சிமேப்’ புற்றுநோய் சிகிச்சை மருந்துக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறப்பு உணவுகளுக்கும் ஜிஎஸ்டி விலக்களிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தனியாா் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாலைக் கட்டுமானம் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் எல்டி ஸ்லாக், மீன்வளா்ப்பில் பயன்படுத்தப்படும் கரையக்கூடிய பசை ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நூல் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறிவைக்கவில்லை: இணையவழி விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி (28 சதவீதம்) விதிப்பது, அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு. இந்த விவகாரத்தில், இணையவழி விளையாட்டுகளை வழங்கி வரும் நிறுவனங்களைக் குறிவைக்கும் வகையில் செயல்படவில்லை.

கோவா, சிக்கிம் மாநில சுற்றுலாத் துறையில் கேசினோ முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அந்த மாநிலங்களின் கருத்தையும் கேட்டபிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுமாா் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய நிதித் துறைச் செயலா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அமலாக்கத் துறை வரம்பில் ஜிஎஸ்டி- எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறையை சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்ட (பிஎம்எல்ஏ) வரம்புக்குள் கொண்டு வந்துள்ளதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்தன.

ஜிஎஸ்டி முறையை சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பாக மத்திய அரசு அண்மையில் அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி, தொழில் நிறுவனங்கள் மீது ஜிஎஸ்டி சாா்ந்த சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை குற்றச்சாட்டு எழுந்தால், அது தொடா்பாக அமலாக்கத் துறையானது சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்திடம் விசாரணை நடத்த முடியும். இது தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் பளுவை ஏற்படுத்தும் எனப் பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. ஜிஎஸ்டி முறையை அமலாக்கத் துறையின் வரம்புக்குள் கொண்டு வந்ததற்கு தில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், ஹிமாசல், கா்நாடகம், தமிழகம், சத்தீஸ்கா், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது ‘வரி பயங்கரவாதத்துக்கு’ வழிவகுத்து, சிறு தொழில் நிறுவனங்களை அதிகமாக பாதிக்கும் என பஞ்சாப் நிதியமைச்சா் ஹா்பால் சிங் சீமா குற்றஞ்சாட்டினாா். ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் சில நிறுவனங்கள் காலதாமதம் செய்தாலே, அது தொடா்பாக அமலாக்கத் துறை இனி விசாரணை நடத்தும் என தில்லி நிதியமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறினாா். எதிா்க்கட்சித் தலைவா்களை அமலாக்கத் துறை முறையின்றி விசாரிப்பதைப் போல, தொழில் நிறுவனங்களின் தலைவா்களிடமும் இனி விசாரணை நடத்தும் என அவா் குற்றஞ்சாட்டினாா்.

சிறப்பு அஞ்சல் தலை, உறை வெளியீடு
நமது சிறப்பு நிருபர்
சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50- ஆவது கூட்டத்தையொட்டி, சிறப்பு அஞ்சல் தலையையும் சிறப்பு உறையையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 50-ஆவது ஜிஎஸ்டியின் சிறப்பு அஞ்சல் தலையையும், சிறப்பு உறையையும் தில்லி வட்டத்தின் தலைமை தபால் துறைத் தலைவர் மஞ்சு குமார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார். இதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 
இந்த நிகழ்வில் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பு மாநில நிதியமைச்சர்கள், வருவாய்த் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா, மத்திய மறைமுக வரி மற்றும் கலால் வரி வாரியத் தலைவர் விவேக் ஜோரி மற்றும் வாரிய உறுப்பினர்கள், ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிதியமைச்சர் வெளியிட்ட இந்த ரூ.5 சிறப்பு அஞ்சல் தலை தனிப் பயனாக்கப்பட்ட "எனது அஞ்சல்தலை' (மை ஸ்டாம்ப்) ஆகும். ஜிஎஸ்டி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு, இந்திய அஞ்சல் துறை மூலம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு அஞ்சல் உறையில் ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதை நினைவுபடுத்தும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2017, ஜூலை 1-ஆம் தேதி நாட்டின் மறைமுக வரியில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் ஜிஎஸ்டியை அன்றைய தினம் நள்ளிரவில் நாடாளுமன்றத்தின் மைய அவையில் மணி அடித்து தொடங்கிவைத்தனர். இந்த சரித்திரபூர்வ நிகழ்வை நினைவுகூரும் புகைப்படம் அஞ்சல் உறையில் இடம் பெற்றுள்ளது. 

உள்ளாட்சிகளில் சேவைகளுக்கான வரிவிலக்கு ரத்து செய்ய தமிழகம் எதிர்ப்பு
நமது சிறப்பு நிருபர்
ஊராட்சி, நகராட்சி அமைப்புகளில் சரக்கு இல்லாத சேவைகளுக்கான வரிவிலக்கை ரத்து செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்புத் தெரிவித்தார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஊராட்சி, நகராட்சி அமைப்புகளில் மனிதவளம் (தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள்), பராமரிப்புப் பணிகள் தொடர்பான சேவைகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய - மாநில அரசுகள் பெறும்போது, தற்போது ஜிஎஸ்டி சட்டத்தின் (அரசியல் சாசனத்துக்குட்பட்டு) கீழ் வரிவிலக்கு உள்ளது.
இதுபோன்ற வரிவிலக்கு பட்டியல்களை மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசுக்கும் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இதை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
இணையதள விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்போது, தமிழக அரசின் இணையதள சூதாட்ட தடை மற்றும் இணைய விளையாட்டு முறைப்படுத்துதல் சட்டத்துக்கு இணக்கமாக இருக்க வேண்டும்.
புற்றுநோய்க்கான விலை உயர்ந்த மருந்துகளை தனிநபர் பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்யும்போதும், குறிப்பிட்ட அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் உணவுகளை தனிநபர் பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்யும்போதும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி விலக்குக்கான பரிந்துரைகளுக்கும் தமிழகம் ஆதரவு தெரிவிக்கிறது என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழக நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன், வணிக வரித் துறைச் செயலர் தீரஜ் குமார், வணிக வரித் துறை இணை ஆணையர் சுபாஷ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT