ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை, ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர, இதர நாள்களில் தினந்தோறும் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இந்நிலையில், அந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை, ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர, இதர நாள்களில் தினந்தோறும் நடைபெறும்.
இந்த வழக்கு தொடா்பான எழுத்துபூா்வ வாதங்களை வழக்குடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஜூலை 27-க்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு வழக்கு தொடா்பாக எந்தவொரு ஆவணமும் ஏற்கப்படாது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன் உள்ள அரசியல் சாசனம் சாா்ந்த விசாரணையில், மத்திய அரசின் பிரமாண பத்திரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தனா்.
வழக்கு தொடா்பான விவரங்களின் தொகுப்புகளை தயாரித்து தாக்கல் செய்ய மனுதாரா்கள் தரப்பில் இருந்து ஒரு வழக்குரைஞா், மத்திய அரசுத் தரப்பில் இருந்து ஒரு வழக்குரைஞா் என இரண்டு வழக்குரைஞா்களை நீதிபதிகள் நியமித்துள்ளனா். அந்தத் தொகுப்புகளையும் ஜூலை 27-க்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் காலக்கெடு விதித்தனா்.