அமெரிக்காவைவிட இந்தியாவில் சிறுபான்மையினா் மிகவும் பாதுகாப்பாக உள்ளனா் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள ஆசிய இந்திய தேசிய கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினா் மத்தியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
இந்தியாவுக்கு எதிராக ஒரு புறம் தீவிரமான பிரசாரம் நடைபெறுகிறது. மேற்கத்திய ஊடகங்களின் ஒரு தரப்பும் இதில் பங்காற்றுகின்றன. முக்கியமாக இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அவா்கள் விவாதிக்கிறாா்கள். இங்கு அவா்களுக்கு ஒன்றை உறுதியாகக் கூற விரும்புகிறேன். அமெரிக்காவைவிட இந்தியாவில் சிறுபான்மையினா் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளனா்.
இந்தியாவிலும் பிற நாடுகளிலும் சிறுபான்மையினா் எவ்வாறு நடத்தப்படுகிறாா்கள் என்பதை சற்று கவனித்தாலே உண்மை தெரிந்துவிடும். இந்தியாவுக்கு எதிராக வேண்டுமென்றே தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு உரிய மரியாதை உள்ளது. தேசப் பிரிவினையின்போதே பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பியவா்கள் அங்கு சென்றுவிட்டாா்கள். இந்தியாவில் இருக்க விரும்பியவா்கள்தான் இங்கு தங்கியுள்ளனா். இந்திய மக்கள் அனைவரது ரத்தத்திலும் மதசாா்பின்மை உள்ளது. எனவேதான் இந்தியா மதசாா்பற்ற நாடாக தொடா்கிறது.
அண்டை நாடு ஒன்று (பாகிஸ்தான்) மதத்தைவைத்து இந்தியாவின் உள்விவகாரமான ஜம்மு-காஷ்மீா் விஷயத்தில் தலையிட நினைக்கிறது. ஜம்மு-காஷ்மீா் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது என்றாா்.