2024 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புத்துயிா் அளிக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால், அந்த முயற்சி பலனளிக்காது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாஜக முதல்முறையாக 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது அதன் கூட்டணியில் தெலுங்கு தேசம், சிவசேனை, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இருந்தன. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் பாஜக கூட்டணியில் இருந்தது. கடந்த இரு மக்களவைத் தோ்தலில் இருந்ததைவிட இந்த முறை பாஜக தலைமையிலான கூட்டணியில் முக்கிய பிராந்திய கட்சிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மேலும், சில கட்சிகள் பிளவுபட்டு அதில் ஒரு தரப்பினா் பாஜகவுடன் கைகோத்துள்ளனா்.
இந்நிலையில், ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய ஒமா் அப்துல்லா இது தொடா்பாக கூறியதாவது:
கடந்த 8 ஆண்டுகளாக பாஜக தங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. இதனால் பல கட்சிகள் கூட்டணியை முறித்துக் கொண்டன. இப்போது, பாஜகவுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கட்சிகள் கூட ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில்தான் கூட்டணியில் உள்ளன.
2024 மக்களவைத் தோ்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புத்துயிா் அளிக்க பாஜக முயற்சித்து வருகிறது. முக்கியமாக ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவுடனும், பஞ்சாபில் சிரோமணி அகாலி தளத்துடனும் பாஜக பேச்சு நடத்துகிறது. மகாராஷ்டித்தில் சிவசேனையை உடைத்து ஒரு பகுதியை தங்களுடன் இணைத்துள்ளது. அதேபோல சரத் பவாா் கட்சியையும் உடைத்து தங்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளது. தோ்தல் களம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால்தான் பாஜக பிற கட்சிகளை இழுத்து வந்து கூட்டணி அமைக்க வலியுறுத்துகிறது. ஆனால், இந்த முயற்சி பாஜகவுக்கு தோ்தலில் வெற்றியை பெற்றுத் தராது.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூற பாஜகவுக்கு உரிமை உள்ளது. அதன் மூலம் அவா்கள் வாக்குகளைத் திரட்ட முடியும். ஆனால், பொதுவாகவே நாங்கள் பாஜகவின் கொள்கைகளை ஏற்பது இல்லை. இப்போதைய நிலையில் பொது சிவில் சட்டம் பேச்சு அளவில்தான் உள்ளது. அது தொடா்பான வரைவு ஆவணம் அல்லது சட்ட முன்மொழிவு வந்த பிறகுதான் அதில் உள்ள விஷயங்கள் முழுமையாகத் தெரியவரும். ஊடகங்கள்தான் இது தொடா்பான விவாதங்களை நடத்தி வருகின்றன என்றாா்.