வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுகளுக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க அக்டோபர் 31-ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலமாகவோ மாற்ற அச்சட்டம் தடை விதிக்கிறது.
மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்திலும் புதிதாக வழக்கு தொடுக்கவும் அச்சட்டம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிராக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவில், "உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹீ ஈத்கா மசூதி உள்ள இடங்களுக்கு ஹிந்துக்கள் உரிமை கோர வசதியாக, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியுள்ளார்.
அதேவேளையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டமே அரசியலமைப்புக்கு எதிரானது என்று அஸ்வினி உபாத்யாய மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மனுக்கள் தொடர்பாக விரிவான பதிலை மத்திய அரசு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். எனவே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்' என்று கோரினார். இதற்கு சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை மத்திய அரசு தொடர்ந்து ஒத்திவைக்கக் கோரி வருவதாக அவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அதனை ஏற்காத நீதிபதிகள், மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க அக்டோபர் 31 வரை அவகாசம் அளித்து வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.