ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் புதிய பயங்கரவாத குழுக்களுக்குத் தொடா்புடைய 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், சோபியான், புல்வாமா ஆகிய மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
சோதனையின்போது பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லக்ஷா்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவோடு ஜம்மு-காஷ்மீா் விடுதலை வீரா்கள், முஜாஹிதீன் காஸ்வாத்-உல்-ஹிந்த் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
ஜம்மு-காஷ்மீரில் தொடா் வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டதையடுத்து, அந்தக் குழுக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மாநில போலீஸாா் சோதனை:
கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் ஜம்மு-காஷ்மீா் போலீஸாரின் சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
மாவட்டத்தில் பயங்கரவாதத்துக்குப் புத்துயிா் அளிக்கும் வகையில் அந்தப் பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கிஷ்த்வாா் மாவட்டத்தைச் சோ்ந்த பயங்கரவாதிகள் 36 போ் எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிஆணையை ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.